ஜப்பானில் மீண்டும் கொரோனா அலை; ஊரடங்கை நீக்குவதால் கவலை

தினமலர்  தினமலர்
ஜப்பானில் மீண்டும் கொரோனா அலை; ஊரடங்கை நீக்குவதால் கவலை

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருந்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகளை அளிக்க, அரசு முடிவெடுத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



ஜப்பானில் இதுவரை, 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தலைநகர் டோக்கியோவில் நேற்று மட்டும் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷின்ஜுகு நகரில் உள்ள மோலியர் தியேட்டரில் கடந்த சில நாட்களாக நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் நடித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடக நிகழ்வில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


ஜப்பானில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் துவங்கியுள்ள போதிலும், ஊரடங்கு கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு விமான நிலையமான நரிதாவில் இரண்டாவது ஒடுதளத்தை அடுத்த வாரத்தில் திறக்க ஐப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கும் அரசின் முடிவிற்கு, மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை