கேரளாவை பரபரப்புக்கு உண்டாக்கிய தங்கக்கடத்தல் வழக்கு: கைதான ஸ்வப்னா, சந்தீப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சரமாரி கேள்வி!!!

தினகரன்  தினகரன்
கேரளாவை பரபரப்புக்கு உண்டாக்கிய தங்கக்கடத்தல் வழக்கு: கைதான ஸ்வப்னா, சந்தீப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சரமாரி கேள்வி!!!

திருவனந்தபுரம்:  ஒட்டுமொத்த கேரளாவையே பரபரப்பிற்கு உள்ளாக்கி வரும் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப்பிடம்  என்.ஐ.ஏ அதிகாரிகள் கிடுக்குபிடியில் விசாரணை நடத்தி வருகின்றனர். 30 கிலோ தங்கக்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள தொழில்நுப்ட துறை முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களை, 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷின் சகோதரர் திருமண நிகழ்ச்சி மற்றும் அதன் பின்னர் நடத்த மது விருந்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும், தொழிலதிபர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அதனுடன் கேரளா ஐ.டி.துறை முன்னாள் செயலர் சிவசங்கருடன் ஏற்பட்ட தொடர்பு, ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான தொடர்பு மற்றும் கடத்தல் தங்கம் யார்யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கடத்தல் தங்கத்தை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாரேனும் வாங்கினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அதோடுமட்டுமல்லாமல் ஸ்வப்னா செய்த முதலீடுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, தகவல்களை முழுமையாக சேகரித்த பிறகு, ஸ்வப்னாவிடம் கிடுக்குபிடி கேள்விகளால் துளைக்க வேண்டும் என்பது என்.ஐ.ஏ அதிகாரிகளின் திட்டமாக உள்ளது.

மூலக்கதை