அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அரிதினும் அரிதாகக் காணப்படும் தங்கநிறப் புலி

தினகரன்  தினகரன்
அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அரிதினும் அரிதாகக் காணப்படும் தங்கநிறப் புலி

டிஸ்பூர்: அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு தங்கநிறப் புலி படம் பிடிக்கப்பட்டுள்ளது. கப்பல் நிறுவன மேலாளரும், வன உயிரின புகைப்பட நிபுணருமான மயூரேஷ் ஹென்றி என்பவர் காசிரங்கா வனப்பகுதியில் சுற்றி வந்தபோது இந்தப் புலியைப் படம் பிடித்துள்ளார். அரிதினும் அரிதாகக் காணப்படும் இந்தப் புலி தற்போது இந்தியாவில் ஒன்று மட்டுமே உள்ளது. சாதாரண புலிகளை விட வெளிறிய பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் புலி, மற்றவைகளை விட முக அமைப்பும் சற்று மாறுபாடு கொண்டது. டாபி புலி என்றும் ஸ்ட்ராபெரி புலி என்றும் அழைக்கப்படும் இது, உடலில் கருப்பு நிறக் கோடுகளுக்குப் பதிலாக சிவப்பு மற்றும் பழுப்பு நிறக் கோடுகளையும், பொன்னிறமான ரோமங்களையும் கொண்டது குறிப்பிடத்தக்கது. உலகில் பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே வைத்து புலிகள் அதிக அடர்த்தியாக வாழு இடமாக காசிரங்கா தேசியப் பூங்கா உள்ளது. இதன் காரணமாக 2006இல் இந்த பூங்கா புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது. இங்கிருக்கும் உயரமான புட்களில் இவை பதுங்கிக்கொள்வதால் புலிகளை கணக்கெடுப்பது பெரும் சவாலாக இங்கே உள்ளது என கூறப்படுகிறது. யானைகள், ராஜ நாகங்கள், காட்டு எருமைகள், மான்கள், 100க்கும் மேற்ப்பட்ட பறவை வகைகள் இப்பூங்காவினுள் வாழ்கின்றன. \'Birdslife International\' என்னும் அமைப்பு உலகில் பறவைகள் வாழும் முக்கியமான இடங்களில் ஒன்றாக இதனை குறிப்பிடுகிறது. மிகப்பெரிதாக வளரக்கூடிய பாம்பு வகைகளான ஆசிய மலைப்பாம்பு, ராக் பைதான், அதிக விஷம் கொண்ட ராஜ நாகங்கள் போன்ற பாம்பு வகைகளும் இங்கே வாழ்கின்றன.

மூலக்கதை