சி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண்கள் வாங்கிய உத்தரபிரதேச மாணவி..: இந்திய வரலாற்றை படிக்க விருப்பம் இருப்பதாக பேட்டி!

தினகரன்  தினகரன்
சி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண்கள் வாங்கிய உத்தரபிரதேச மாணவி..: இந்திய வரலாற்றை படிக்க விருப்பம் இருப்பதாக பேட்டி!

லக்னோ: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  அதன்படி, வெளியான தேர்வு முடிவுகளில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றில் திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்கள் இந்தியாவிலேயே அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அங்கு 97 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வில் திவ்யன்ஷி ஜெயின் என்ற மாணவி 100% மதிப்பெண் வாங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின், மொத்தமுள்ள 600 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார். நவ்யூக் ரேடியன்ஸ் சீனியர் பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவி, ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், இன்சூரன்ஸ் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதி இருந்தார். புவியியல் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுதி இருந்தார். கொரோனா காரணமாக புவியியல் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய திவ்யன்ஷி ஜெயின், இது நம்பமுடியாதது. நான் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியடைகிறேன், ஆச்சரியப்படுகிறேன். தொழிலதிபர் தந்தை மற்றும் இல்லத்தரசி தாயின் இரண்டாவது குழந்தையான, திவ்யான்ஷி தனது வெற்றியின் பெருமையை தனது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளார். என்னை ஆசிரியர்கள் சரியான பாதையில் அழைத்து சென்றனர், எனது பெற்றோர் காரணமாக ஒரு முறையான வழக்கத்தை என்னால் பின்பற்ற முடிந்தது. இந்த இரண்டு காரணிகளும் எனது படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும் என்னை அனுமதித்தன, நான் தூங்க போதுமான நேரம் எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்றினேன், என்று திவ்யான்ஷி  கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், வருங்காலத்தில், இந்தியாவின் கடந்த கால வரலாறை ஆராய்ச்சி செய்யும் படிப்பை படிக்க விரும்புகிறேன்.  நம் நாட்டின் வரலாறை பற்றி படித்து அதிகம் தெரிந்து கொள்வேன். இதற்காக டெல்லி பல்கலையில் பி.ஏ. வரலாறு படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளேன், என்று கூறியுள்ளார்.

மூலக்கதை