ராமர் இந்தியரே அல்ல; நேபாளி.. உண்மையான அயோத்தி நேபாள நாட்டில் தான் உள்ளது : நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சர்ச்சை பேச்சு!!

தினகரன்  தினகரன்
ராமர் இந்தியரே அல்ல; நேபாளி.. உண்மையான அயோத்தி நேபாள நாட்டில் தான் உள்ளது : நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சர்ச்சை பேச்சு!!

காத்மாண்டு :  உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, தங்களது நாட்டில் தான் உள்ளது என்று நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கலாச்சார ரீதியாக நேபாளம் ஒடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.வரலாற்று ரீதியாக பல உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.குறிப்பாக அயோத்தி இந்தியாவில் இல்லை, அது நேபாள நாட்டில் உள்ள பிற்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமத்தில் தான் ராமர் பிறந்தார் என்று ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார். அதன்படி பார்க்கும் போது, ராமர் இந்தியரே அல்ல, நேபாளி என்றும் ஒலி பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசியதாவது,\'கலாச்சார ரீதியாக நாம் ஒடுக்கப்பட்டு இருக்கிறோம். பல உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கின்றன.இந்திய இளவரசன் ராமருக்கு நாம் சீதையைக் கொடுத்ததாக இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அயோத்தியைச் சேர்ந்த இளவரசனுக்குதான் சீதையை கொடுத்தோமே தவிர,இந்தியாவுக்கு கொடுக்கவில்லை.அயோத்தி என்பது பிற்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம் கிராமம்.இந்தியாவில் இப்போது உருவாக்கி வைத்திருக்கிறார்களே அது அயோத்தியே அல்ல.\' என்றார். இந்திய தூதரகம் தொடர்ந்து தனக்கு எதிராக செயல்படுவதாகவும் தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள், காத்மாண்டு உட்பட நேபாளத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறுவதாகவும் ஷர்மா ஒலி கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்தியாவுக்கு சொந்தமான  காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை நேபாள அரசு, தங்களது எல்லைக்குள் சேர்த்து புதிய வரைப்படத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் இருந்தே இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. சீனாவின் தூண்டுதலின் பேரிலேயே ஷர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிராக இவ்வாறெல்லாம் நடப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை