மாஸ் காட்டியவர்...மாஸ்க் மாட்டினார்... டிரம்ப்பையும் வழிக்கு கொண்டு வந்த கொரோனா

தினகரன்  தினகரன்
மாஸ் காட்டியவர்...மாஸ்க் மாட்டினார்... டிரம்ப்பையும் வழிக்கு கொண்டு வந்த கொரோனா

வாஷிங்டன்: மாஸ்க்கா... நானா...? நெவர்..! என்று வீம்பு காட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் வழிக்கு கொண்டு வந்திருக்கிறது கொரோனா. பிடிவாதங்களை தூக்கி எறிந்து, முதல்முறையாக பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து காட்சியளித்துள்ளார். கொரோனா அமெரிக்க மக்களை கொத்துக் கொத்தாக கொத்துப் புரோட்டா போட்டுக் கொண்டிருந்த நாட்களில் கூட, மாஸ்க் அணியாமல் கெத்து காட்டினார் அதிபர் டிரம்ப். ‘‘மாஸ்க் அணிந்தால், என்னை பலவீனமானவன் என்று நினைத்து விடுவார்கள்’’ என்று விளக்கம் கொடுத்ததுடன், அதிபர் தேர்தல் பிரசாரத்துக்காக மாஸ்க் அணிந்த முகத்துடன் களமாடிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடேனை விமர்சனமும் செய்தார்.நான்கு மாதங்களாக தொடர்ந்து வந்த அவரது பிடிவாதம் முதல்முறையாக முடிவுக்கு வந்திருக்கிறது. தலைநகர் வாஷிங்டன் புறநகர் பகுதியில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை சந்திப்பதற்காக அதிபர் டிரம்ப் சனிக்கிழமை வந்தார். ஆச்சர்யமளிக்கும் விதமாக, இந்த நிகழ்ச்சியின் போது அவர் முதல்முறையாக மாஸ்க் அணிந்திருந்தார். அமெரிக்க அதிபருக்கான முத்திரை பதிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து வந்தார். பொதுவெளியில் முதல்முறையாக மாஸ்க் அணிந்து வந்தது, அமெரிக்காவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ‘‘கொரோனா அச்சம் கடைசியில், அதிபரையும் விட்டு வைக்கவில்லை...’’ என்று கூறி வருகிறார்கள்.* ‘நேரம், காலம் வேணாம்மா?’திடீர் மாஸ்க் அவதாரம் குறித்து டிரம்ப் கூறுகையில், ‘‘மாஸ்க் அணிவதற்கு நான் எப்போதுமே எதிரான நபர் அல்ல. ஆனால், உரிய நேரம், இடத்தில் அதை அணியவேண்டும் என்று காத்திருந்தேன். மருத்துவமனையில் இருக்கும் போதும், சிகிச்சை பெறுவோரை சந்திக்கும் போதும், பொதுமக்களை சந்திக்கும் போதும் தான் மாஸ்க் அணிய வேண்டும் என்றிருந்தேன். மாஸ்க் அணிவதை நான் முக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை