பரிசோதனையில் நெகடிவ் வந்தாலும் சிகிச்சையளிக்க வேண்டும்: நிபுணர்கள் பரிந்துரை

தினகரன்  தினகரன்
பரிசோதனையில் நெகடிவ் வந்தாலும் சிகிச்சையளிக்க வேண்டும்: நிபுணர்கள் பரிந்துரை

புதுடெல்லி: ‘கொரோனா பரிசோதனை முடிவு நெகடிவ் என்று இருந்தாலும், அவர்களிடம் காணப்படும் அறிகுறிகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்,’ என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனாவின் தாக்குதலுக்கு சளி, இருமல், தொண்டைப்புண், காய்ச்சல், மூச்சுத் திணறல், சுவை உணர்வை இழத்தல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனையில் நெகடிவ் என்று முடிவு வந்த பலருக்கு, அதன் பிறகு எடுக்கப்படும் சோதனைகளில் தொற்று உறுதியாகி வருகிறது.எனவே, பரிசோதனை முடிவு நெகடிவ் என்று இருந்தாலும், அவர்களிடம் காணப்படும் அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு மருத்துவ நிபுணர் நீரஜ் குப்தா கூறுகையில், ``மருத்துவ அறிகுறி மற்றும் சி.டி ஸ்கேன் அறிக்கையின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பது சரிதானா என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால்,  ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுகள் 70 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டவையாக உள்ளன. அதே போல், விரைவான ஆன்டிஜென் சோதனை முடிவுகளும் 40 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆன்டிபாடி சோதனைகள் 90 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டதாக இருப்பதால் மிகவும் பயன் உள்ளதாக தெரிகிறது. சோதனை மாதிரிகள் சரியான முறையில் சேகரிக்கப்படவில்லை என்றாலும், பரிசோதனையின் போது வைரஸ் குறைவாக இருந்தாலும், நெகடிவ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, சோதனை முடிவுகளை மட்டும் நம்பாமல், அறிகுறி அடிப்படையிலும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்’’ என்றார். சோதனை மாதிரிகள் சரியான முறையில் சேகரிக்கப்படவில்லை என்றாலும், பரிசோதனையின் போது வைரஸ் குறைவாக இருந்தாலும், நெகடிவ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மூலக்கதை