செல்போன் சுவிட்ச் ஆப் 2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
செல்போன் சுவிட்ச் ஆப் 2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ்

கதக்: கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், முண்டரகி நகரின் ஹுட்கோ காலனியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக, வீட்டு தனிமையில் உள்ள குடும்பத்தினர் சுகாதாரம், வருவாய் மற்றும் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள செல்போன் நம்பரை, தனிமை காலம் முடியும் வரை எப்போதும் ஆனில் வைக்க வேண்டும், அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசும்போது, கேட்கும் விவரம் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில், வீட்டு தனிமையில் இருந்த குடும்பத்தினர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது. இதில் கோபமடைந்த முண்டரகி தாசில்தார், ஆதித்யாஸ்ரீ கும்பாரா என்பவருக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை நோட்டீசில், ‘வீட்டு தனிமையில் உள்ள நீங்கள், செல்போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளது தேசிய பேரிடர் தடுப்பு சட்டம்-2005, விதி 15 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 188  ஆகிய பிரிவின் கீழ் குற்றமாகும். உங்கள் தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரை  செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால், 14 நாள் கூடுதலாக வீட்டு தனிமையில் வைக்கப்படுவீர்கள்’ என்று கூறியுள்ளார். தாசில்தாரின் இக்கடிதம் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து கதக் மாவட்ட கலெக்டர் சுந்தரேஷ் பாபுவிடம் கேட்டபோது, ஆதித்யஸ்ரீ கும்பாரா என்பது 2 வயது பெண் குழந்தையின் பெயர், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் பெயரை சரிபார்க்காமல் தாசில்தார் செய்துள்ள தவறு என்று கூறியதுடன் பணிச்சுமை காரணமாக இதுபோல் ஏற்படுவது சகஜம் என்று சமாளித்தார்.

மூலக்கதை