பல்கலை, கல்லூரி தேர்வுகள்: மத்திய அரசு முடிவு மாறுமா?

தினமலர்  தினமலர்
பல்கலை, கல்லூரி தேர்வுகள்: மத்திய அரசு முடிவு மாறுமா?

கொரோனா ஊரடங்கு நீடிப்பதால், பல மாநிலங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதனால், கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கான, இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகள் நடக்குமா என்ற, கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., 'இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்' என, சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் டில்லி போன்ற மாநிலங்கள், ஏற்கனவே, பல்கலை, கல்லுாரிகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.

'எந்த ஒரு கல்வி முறையிலும், மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வது மிகவும் அவசியம். தேர்வுகள் வாயிலாக பெறும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு, நம்பிக்கையையும், திருப்தியையும் அளிக்கின்றன' என, தேர்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ள, யு.ஜி.சி., விளக்கம் அளித்துள்ளது.

யு.ஜி.சி., பிறப்பித்துள்ள உத்தரவால், ஏற்கனவே தேர்வுகளை ரத்து செய்துள்ள, பல மாநில அரசுகள், தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. யு.ஜி.சி.,யின் முடிவுக்கு, மாணவர்கள், பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், யு.ஜி.சி.,யின் உத்தரவுக்கு எதிராக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கல்லுாரிகளின் விடுதிகள் மற்றும் வகுப்பறைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது உட்பட, பல காரணங்களால், செப்டம்பர் இறுதிக்குள் கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கான இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், மாநில அரசுகளே முடிவெடுக்க, அதிகாரம் அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கைக்கு, வலு சேர்க்கும் வகையில், யு.ஜி.சி.,யின் தலைவர், திரேந்திர பால் சிங்கிற்கு, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரான, சுக்தேவ் தோரட், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், 'கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வை நடத்துவது என, எடுத்துள்ள முடிவு, துரதிருஷ்டமானது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்' என,தெரிவித்துள்ளார்.

அவரின் கடிதத்தில், உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டபேராசிரியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யலாம் என, பரவலாக கோரிக்கை எழுந்தாலும், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

கடைசி செமஸ்டருக்கு முந்தைய செமஸ்டர்களில் உள்ள பாடங்களில், மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால், அவர்களை முழுமையாக தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியுமா; அவர்களுக்கு பட்டம் வழங்க முடியுமா? இல்லையெனில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தனியாக தேர்வுகள் நடத்தப்படுமா; அப்படியெனில், எப்போது நடத்தப்படும்; தேர்வுகளை நடத்தாமல், மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் போது, அவற்றுக்கு மதிப்பு இருக்குமா என, பல கேள்விகள் எழுகின்றன.

அதே நேரத்தில், மாணவர்களுக்கான தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்தலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ள யோசனையை நிறைவேற்றவும் வாய்ப்பு இல்லை. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது என்பது மட்டுமின்றி, இந்த முறையில் மோசடிகள் நிகழலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், கல்லுாரி படிப்பை முடித்து, அரசு பணிக்கு செல்ல நினைப்போர், போட்டி தேர்வுகளையும், பிரபலமான தனியார் நிறுவன பணிக்கு செல்வோர், அந்த நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளையும், நேர்முக தேர்வையும் சந்தித்த பிறகே, பணியில் சேர்க்கப்படுகின்றனர்.அதனால், இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்தாலும், திறமையான மாணவர்கள் தாங்களாகவே தங்களின் திறமையை வளர்த்து, இந்தத் தேர்வுகளை எதிர்கொண்டு விடுவர் என்பதில், சந்தேகமில்லை.

மேலும், கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றாலும், பல மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி பெற்றவர்களாக இல்லை என, குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. பணியில் சேர்ந்தபிறகே, அவர்கள் பயிற்சி பெறுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல், எப்போது முடிவுக்கு வரும்; எப்போது கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்ற நிச்சயமற்ற நிலை, தற்போது வரை நிலவுகிறது. எனவே, பல்கலை, கல்லுாரிகள் தேர்வுகள் விஷயத்தில், மத்திய அரசும், யு.ஜி.சி.,யும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால்,நிபுணர் குழு அமைத்து, அவற்றின் பரிந்துரை அடிப்படையில் தீர்வு காணலாம்.

மூலக்கதை