இந்திய எல்லை பாதுகாப்பு: தேஸ்வால் உறுதி

தினமலர்  தினமலர்
இந்திய எல்லை பாதுகாப்பு: தேஸ்வால் உறுதி

குருகிராம் : ''இந்திய நாட்டின் ஒட்டுமொத்த நிலமும், நம் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளது,'' என, இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை டி.ஜி., தேஸ்வால் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த மாதம், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இருநாட்டு உயரதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன ராணுவத்தினர், அங்கிருந்து பின் வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை மற்றும் பி.எஸ்.எப்., எல்லை பாதுகாப்புப் படையின், டி.ஜி., - எஸ்.எஸ்.தேஸ்வால், ஹரியானாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய நாட்டின் ஒட்டுமொத்த நிலமும், நம் பாதுகாப்புப் படைகளின் முழு கட்டுப்பாட்டில், பாதுகாப்பாக உள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு என, அனைத்து எல்லைகளும், பாதுகாப்பாக உள்ளன.

அனைத்து எல்லைகளிலும், தேவையான எண்ணிக்கையில், இந்தோ - திபெத்திய எல்லை காவல்படையினர் உள்ளனர். நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.நம் திறமையான பாதுகாப்புப் படை வீரர்கள், மிகவும் சுறுசுறுப்பாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள், நமக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு எதிரியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் இருந்து, நம் எல்லைகளை பாதுகாக்கும் வலிமை மற்றும் திறன் பெற்றவர்கள். அவர்களின் மன உறுதி மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த துணிச்சலான வீரர்கள், தங்கள் உயிரை விட, நாட்டின் பாதுகாப்பையே மிகவும் முக்கியமானதாக கருதி பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை