விண்டீஸ் அணி அசத்தல் வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம் | ஜூலை 12, 2020

தினமலர்  தினமலர்
விண்டீஸ் அணி அசத்தல் வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம் | ஜூலை 12, 2020

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஜெர்மைன் பிளாக்வுட் 95 ரன் விளாச, விண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி ஏமாற்றம் அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204, விண்டீஸ் 318 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 284/8 ரன்கள் எடுத்திருந்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு மார்க் உட் (2) ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் (23) ஆறுதல் தந்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 313 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஆண்டர்சன் (4) அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் சார்பில் கேப்ரியல் 5 விக்கெட் கைப்பற்றினார்.

ஆர்ச்சர் அசத்தல்: பின், 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணியின் கேம்ப்பெல் (1) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். ஆர்ச்சர் ‘வேகத்தில்’ பிராத்வைட் (4), ஷமர் புரூக்ஸ் (0) அவுட்டாகினர். ஷாய் ஹோப் (9) நிலைக்கவில்லை.

பிளாக்வுட் அபாரம்: பின் இணைந்த ராஸ்டன் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. நான்காவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது ஆர்ச்சர் பந்தில் சேஸ் (37) சரணடைந்தார். அபாரமாக ஆடிய பிளாக்வுட், ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஸ்டோக்ஸ் பந்தில் டவ்ரிச் (20) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பிளாக்வுட் 95 ரன்னில் அவுட்டானார்.

விண்டீஸ் வெற்றி: மீண்டும் களமிறங்கிய ஜான் கேம்ப்பெல், ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் விண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் (14), ஜான் கேம்ப்பெல் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3, ஸ்டோக்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விண்டீஸ் அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 16ல் மான்செஸ்டரில் துவங்குகிறது. ஆட்ட நாயகன் விருதை விண்டீஸ் வீரர் ஷனான் கேப்ரியல் வென்றார்.

 

கொரோனா அச்சம் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த ஐ.சி.சி., தடை விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன், எச்சிலை பயன்படுத்தினார்.

ஐந்து விக்கெட்

‘வேகத்தில்’ அசத்திய விண்டீசின் ஷனான் கேப்ரியல் 21.2 ஓவரில், 75 ரன் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 6வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தினார். கடந்த 2018ல் செயின்ட் லுாசியாவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 20.4 ஓவரில், 62 ரன் வழங்கி, 8 விக்கெட் சாய்த்தது இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

மூலக்கதை