அம்பயர் தீர்ப்பு: சச்சின் திடீர் எதிர்ப்பு | ஜூலை 12, 2020

தினமலர்  தினமலர்
அம்பயர் தீர்ப்பு: சச்சின் திடீர் எதிர்ப்பு | ஜூலை 12, 2020

மும்பை: ‘‘அம்பயர் தீர்ப்பு மறு பரிசீலனையில் உள்ள ‘அம்பயர்ஸ் கால்’ பிரிவை நீக்க வேண்டும். இது வீரர்களுக்கு கடினமாகவும்,  நியாயமற்றதாக உள்ளது,’’ என சச்சின் தெரிவித்தார்.

அம்பயர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் (‘டி.ஆர்.எஸ்.,) முறையில் எல்.பி.டபிள்யு., அவுட்டை கண்டறிய ‘பால் டிராக்கிங்’ முறை  பயன்படுகிறது. அப்போது பந்தின் 50 சதவீத பகுதி அல்லது அதற்கும் மேல் என ‘ஸ்டம்சில்’ தாக்கினால் மட்டுமே, அவுட் தரப்படும்.  ஒருவேளை பந்து 50 சதவீதத்துக்கும் குறைவாக தாக்கினால், சந்தேகத்தின் பலன் அம்பயருக்கு செல்லும். கள அம்பயர் எடுத்த முடிவு  (அம்பயர்ஸ் கால்’) மாறாது. அவர் அவுட் கொடுத்திருந்தால் வீரர் வெளியேற வேண்டும். அவுட் கொடுக்கவில்லை என்றால் தொடர்ந்து  விளையாடலாம். அப்பீல் வாய்ப்பும் தக்க வைக்கப்படும். 

இதற்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது:

ஐ.சி.சி.,யின் ‘டி.ஆர்.எஸ்., முறையில் ஒருசில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்.பி.டபிள்யு., அப்பீல் செய்யும் போது,  பந்தின் 50 சதவீத பகுதி அல்லது அதற்கும் மேல் என ‘ஸ்டம்சில்’ தாக்கினால் மட்டுமே,  களத்தில் இருந்த அம்பயர் தந்த தீர்ப்பில்  மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பவுலர்களும், பேட்ஸ்மேன்களும் அதிருப்தி அடைகின்றனர். இது அவர்களுக்கு கடினமாகவும்,  நியாயமற்றதாகவும் உள்ளது.

கள அம்பயர் தீர்ப்பை சோதனை செய்ய, தொழில்நுட்ப முறைக்கு சென்று விட்டால், அதன் முடிவை ஏற்க வேண்டும்.  டென்னிஸ்  போட்டிகளில் அப்பீல் செய்தால் ‘ஹாக் ஐ’முறையில் பந்து கோட்டில் பட்டதா அல்லது வெளியே சென்றதா என்பது குறித்து தெளிவான  முடிவு சொல்வர். அதுபோல கிரிக்கெட்டில் பந்து ‘ஸ்டம்சில்’ பட்டுவிட்டால் அவுட் தர வேண்டும். இதை விட்டுவிட்டு சதவீத  கணக்குகளை வைத்து இரண்டுக்கும் இடைப்பட்ட முறையில் தீர்ப்பு வழங்குதல் கூடாது. 

இவ்வாறு சச்சின் கூறினார்.

 

ஹர்பஜன் சிங் ஆதரவு

ஹர்பஜன் சிங் கூறுகையில்,‘‘உங்கள் கருத்து 1000 சதவீதம் சரியானது. இதை வரவேற்கிறேன். பந்து ‘ஸ்டம்சை’ தாக்கினால் அல்லது உரசிச் சென்றால் அதற்கு அவுட் தர வேண்டும். பந்தின் எவ்வளவு பகுதி ஸ்டம்சில் படுகிறது என பார்க்கக் கூடாது. கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக ஒருசில விதிகளை மாற்றுவது. அதில் இதுவும் ஒன்று,’’ என்றார்.

மூலக்கதை