பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரேடார் வடிவமைப்பு காரணம் - ஈரான் அறிக்கை!

தினமலர்  தினமலர்
பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரேடார் வடிவமைப்பு காரணம்  ஈரான் அறிக்கை!

டெஹ்ரான்: ஜனவரி மாதம் உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 176 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தங்கள் வான் பாதுகாப்பு பிரிவின் ரேடார் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறே காரணம் என ஈரான் அறிக்கை அளித்துள்ளது.


கடந்த ஜனவரி 8-ம் தேதி உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 176 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கியது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இவ்விமானம் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். ஈரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் அப்போது ஒப்புக்கொண்டது.
அப்போது ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன்களால் கொல்லப்பட்டார். அதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த பதற்றமான சூழலில் தான் ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இது தொடர்பாக விமான போக்குவரத்து கழகம் விசாரணை நடத்தி உண்மை அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது இறுதி விசாரணை அறிக்கை இல்லை என்றும் கூறியுள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரேடாரை ஒழுங்குப்படுத்தும் நடைமுறையின் போது மனித பிழை காரணமாக தோல்வி ஏற்பட்டது, இது ரேடார் அமைப்பில் 107 டிகிரி பிழை ஏற்படுத்தியது. இதனால் விமான பாதையை கண்காணிக்கும் ரேடார் ஆபரேட்டருக்கு தவறான அடையாளம் காட்டப்பட்டது. இதனால் இரண்டு ஏவுகணைகள் சுடப்பட்டது. முதலாவது ஒரு பாதுகாப்பு பிரிவு ஆபரேட்டரால் சுடப்பட்டது. அவர் ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்காத போதும் இதனை செய்தார். 30 விநாடிகள் கழித்து 30 விநாடிகள் கழித்து சுடப்பட்டது. இதில் விமானம் விழுந்து நொறுங்கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை