தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல்!

தினகரன்  தினகரன்
தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல்!

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவின் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க டெல்லியில் இருந்து கமாண்டோ படையினர் விரைகின்றனர். ஸ்வப்னா கூட்டாளிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கக்கடத்தலுக்கு பயன்படுத்திய 6 பைகளும் சிக்கியுள்ளன. கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் பெங்களூரில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் பலமணி நேரம் விசாரணைக்கு பின்னர், அவர்கள் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டு கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தங்க கடத்தல் வழக்கில் அரசியல் தொடர்புகள், அதிகாரிகள் தொடர்புகள், சர்வதேச தீவிரவாத கும்பலின் தொடர்புகள் என முறைகேடு பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. எனவே இதில் விரிவான விசாரணை நடத்தக்கூடிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் பல்வேறு ரகசியங்களும், தொடர்புகளும் அம்பலமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கின்றன. இந்த நிலையில் தான் விசாரணை அதிகாரிகளுக்கு திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்வப்னாவின் பின்னணியில் சர்வதேச தங்கக்கடத்தல் கும்பலும், தீவிரவாதிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்த தகவலும் உள்ளதால் தீவிரவாதிகளிடம் இருந்து இத்தகைய மிரட்டல் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் உடனடியாக டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே விசாரணையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, விசாரணை அதிகாரிகளுக்கு உயர் பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் கமாண்டோ படைகளை டெல்லியில் இருந்து அனுப்பி வைக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. டி.ஆர்.பி.எஃப். பிரிவை சேர்ந்த 30 கமாண்டோ படை வீரர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் கொச்சி விரைகின்றனர். இந்த மிரட்டல் விவகாரம் கேரள மாநிலத்தில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 6 தங்க கடத்தல் பை சிக்கியது!ஸ்வப்னா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ரகசியங்களை வெளிகொண்டுவருவதில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். இதற்கிடையே தான் ஸ்வப்னாவின் கூட்டாளிகளான சரித், சந்தீப் நாயர் ஆகியோர் வீடுகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது தங்க கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 பைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில் மூன்று பைகளில் தூதரக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கின்றன, இரண்டு பைகளில் அந்த ஸ்டிக்கர் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டிய பசை மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே அந்த பையை உடனடியாக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர். சரித், சந்தீப் நாயர் வீட்டில் கைப்பற்றப்பட்டதை போன்றே அதிகாரி சிவசங்கர் வீட்டில் மற்றொரு பை சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை