சீனாவில் தொடரும் கனமழை; பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
சீனாவில் தொடரும் கனமழை; பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

பீஜிங்: சீனாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டாம் நிலையை எட்டியுள்ளது.



சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் அதீத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது; பல நகரங்கள் நீரில் மூழ்கி வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். சாலைகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்துள்ளன.


முக்கிய நகரங்களில் 'ரெட் அலர்ட்'


சீனாவின் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: சீனாவில் தொடர்ந்து கனமழைக்கான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல் காரணமாக சீனாவில் 140க்கும் அதிகமானவர்கள் இதுவரை மாயமாகி உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளது.


'சீனா இத்தகைய கனமழை மற்றும் புயலை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. ஆனால், 1961க்குப் பிறகு மழையின் அளவு, 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நகர்மயமாதலை நோக்கி சீனா வேகமாக நகர்ந்து வரும் நிலையில், இம்மாதிரியான வெள்ளப் பெருக்கு பெரும் சேதத்தையும் வளர்ச்சிக்கான கட்டமைப்பையும் சிதைத்து விடும்' என, வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை