ரூ.25 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு: ராஜஸ்தான் முதல்வரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.25 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி 3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு: ராஜஸ்தான் முதல்வரின் குற்றச்சாட்டை தொடர்ந்து அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ரூ. 25 கோடி பேரம் நடப்பதாக முதல்வர் கெலாட் கூறிய நிலையில், குதிரை பேரத்தில் சிக்கிய 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் மீது மாநில ஊழல் தடுப்பு போலீசார் அதிரடியாக வழக்குபதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜ முயல்வதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

மாநிலங்களவை தேர்தல் எந்த சச்சரவுமின்றி சுமூகமாக முடிந்தது. இந்நிலையில், தனது ஆட்சியை கவிழ்க்க பாஜ தொடர்ந்து முயற்சிப்பதாக அசோக் கெலாட் மீண்டும் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

நேற்று முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க பாஜக முயலுகிறது.

இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014ம் ஆண்டுக்கு பிறகு பாஜக மிகமோசமாக மாறி விட்டது.

மதத்தை பயன்படுத்தி பிரிவுகளை உருவாக்க முயலுகிறார்கள்.

ராஜஸ்தானில் இந்த அரசாங்கம் நிலையானது; அது அதன் முழு காலத்தையும் நிறைவு செய்யும்.

பாஜ தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் ஆட்சி நடப்பதை பிரதமர் மோடியாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பல குழப்பத்தை விளைவிக்கிறார்கள். இதில் பாஜ அனைத்து எல்லையையும் மீறி விட்டது.

எனது ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து தனது முயற்சிகளை அதிகரித்து வருகிறது. கட்சி மாறுவதற்காக எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ. 25 கோடி தருவதாக அவர்கள் விலை பேசி இருக்கிறார்கள்.

முன்பணமாக ரூ. 10 கோடியும், ஆட்சியை பிடித்ததும் ரூ. 15 கோடி தருவதாகவும் பேரம் பேசியிருக்கிறார்கள். இது அவமானகரமானது’ என்று தெரிவித்தார்.

ஆனால் முதல்வரின் கருத்தை ராஜஸ்தான் மாநில பாஜ தலைவர் சதீஷ் பூனியா மறுத்தார். இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி மாற வைக்க குதிரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் தரப்பில் சிறப்பு போலீஸ் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு போலீசார், நேற்றிரவு  மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் மீது எஃப். ஐ. ஆர் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் தவுசாவைச் சேர்ந்த எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ஹூட்லா, அஜ்மீரைச் சேர்ந்த எம்எல்ஏ சுரேஷ் டேங்க் மற்றும் பாலி மாவட்டத்தின் மார்வார் எம்எல்ஏ குஷ்வீர் சிங் ஆகியோர் ஆவர்.

இவர்கள், ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் சக சுயேட்சை எம்எல்ஏக்களை, தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி டாக்டர் அலோக் திரிபாதி தெரிவித்தார்.

ஏற்கனவே ஜூன் மாதம் மாநிலங்களவை தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க சில எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசப்பட்டு வருவதாக கூறினார். அப்போது, ஊழல்தடுப்பு போலீசாரிடம் இரண்டு ரகசிய செல்போன் எண்களும் வழங்கப்பட்டன.

தற்போது தலைமை கொறடா மகேஷ் ஜோஷி ெகாடுத்த புகாரில், பன்ஸ்வாரா மாவட்டத்தின் குஷல்கரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ரமிலா காடியா, தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ மகேந்திரஜித் சிங் மால்வியா ஆகியோர் மீதும் புகார் அளித்துள்ளார். முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், ஆளும் கட்சியை ஆதரித்த மற்ற சுயேட்சை எம்எல்ஏக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் கெலாட் பேசிய நிலையில், தற்போது 3 எம்எல்ஏக்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை