பெங்களூருவில் சிக்கிய தங்கராணி சொப்னாவிடம் விடிய விடிய விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூருவில் சிக்கிய தங்கராணி சொப்னாவிடம் விடிய விடிய விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதாக, தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் கைதானார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிகாரி சொப்னா சுரேசை கொச்சி என்ஐஏ அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர்.

அவரது கணவர், 2 குழந்தைகள், சந்தீப் நாயர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தங்கராணி சொப்னா சுரேஷ் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் விவரம் வருமாறு: கடந்த 5ம் தேதி இரவு வரை சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் திருவனந்தபுரத்தில் தான் இருந்து உள்ளனர். இரவு திடீரென மும்மடங்கு லாக்-டவுன் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து சொப்னா சுரேஷ், கணவர், குழந்தைகள், சதீஷ் நாயருடன் காரில் கொச்சி புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு அறையெடுத்து சில நாட்கள் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு என்ஐஏ இந்த வழக்கை ஏற்றது.

இதையடுத்து அனைவரும் காரில் கோயம்பத்தூர் வழியாக பெங்களூரு தப்பி சென்றுள்ளனர். இதற்கிடையே ெசாப்னா சுரேஷின் ஆடியோ தகவல் மலையாள தொலைக்காட்சிகளில் வெளியானது.



இந்த ஆடியோ தகவலை என்ஐஏ தீவிரமாக பரிசோதித்தது. அதில் சொப்னா சுரேஷுடன் குழந்தைகளின் சத்தமும் கேட்டது.

இதையடுத்து குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளதை என்ஐஏ உறுதி செய்தது. சொப்னா சுரேஷின் மூத்த மகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

அவடன் படிக்கும் தோழிகளிடம் இருந்து என்ஐஏ மகளின் செல்ேபான் நம்பரை வாங்கி வைத்திருந்தது.
சொப்னா சுரேஷின் செல்போன் உள்பட இந்த செல்போன் நம்பரையும் என்ஐஏ கண்காணித்து வந்தது.

சொப்னாவின் ஆடியோ பல ெசல்போன்களுக்கு கைமாறி டிவி சேனலுக்கு வந்துள்ளது. இதனால் அது முதலில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிப்பதில் என்ஐஏக்கு சிரமம் ஏற்பட்டது.

தீவிர முயற்சிக்கு பின்னர் ஆடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனின் ஐபி அட்ரஸை கண்டுபிடித்தனர். அதை வைத்தும் சொப்னாவை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்தது.

இதற்கிடையே சந்தீப் நாயரின் வீட்டில் சுங்க இலாகாவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சந்தீப் நாயரின் சகோதரருக்கு ஒரு போன் வந்தது. ஆனால் அவர் அதை எடுக்கவில்லை.

அவரிடம் கேட்டபோது தனது வக்கீலிடம் இருந்து போன் வந்ததாக கூறி உள்ளார். சந்தேகம் அடைந்த சுங்க இலாகாவினர் போனை பரிசோதித்தபோது  பெங்களூருவில் இருந்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரையும் வைத்து விசாரணை நடந்து வந்தது.

சொப்னா சுரேஷின் மகள் படிக்கும் கல்லூரியின் மாணவிகள் பயன்படுத்தும் பேஸ்-புக், வாட்ஸ்-அப் தகவல்களை, அவரது மகள் பார்த்ததை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ஐபி நம்பரை வைத்து பரிசோதித்த போது மகள் பெங்களூருவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை கொச்சி என்ஐஏ அதிகாரிகள், பெங்களூருவில் உள்ள ஐதராபாத் பிரிவு என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது சொப்னா சுரேஷ் பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது.

அதன்படி நேற்று மதியம் முதல் அந்த ஓட்டலை அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் சொப்னா, கணவர், குழந்தைகள் அறையில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் ஓட்டலை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர்.
அப்போது அறையில் சந்தீப் நாயரும் இருந்துள்ளார்.

அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விடியவிடிய என்ஐஏ அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை கார் மூலம் கொச்சி நோக்கி புறப்பட்டு உள்ளனர். மதியத்துக்கு பிறகு அவர்கள் கொச்சி வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரித்குமாரிடம் நடத்திய விசாரணையில், கடத்திய தங்கத்தை மலையாள சினிமா தயாரிப்பாளர்களுக்கும், ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் கொடுத்துள்ளனர். ஹவாலா பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக தங்க கட்டிகளை கொடுத்துள்ளனர்.

இந்த பணத்தை சினிமா தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் மலையாள சினிமா உலகை சேர்ந்தவர்களும் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை