தோனி தந்த அதிர்ச்சி: கங்குலி நெகிழ்ச்சி | ஜூலை 11, 2020

தினமலர்  தினமலர்
தோனி தந்த அதிர்ச்சி: கங்குலி நெகிழ்ச்சி | ஜூலை 11, 2020

கோல்கட்டா: ‘‘எனது கடைசி டெஸ்டில், அணியை வழிநடத்தும் வாய்ப்பு அளித்து இன்ப அதிர்ச்சி தந்தார் தோனி,’’என, கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் கங்குலி. தற்போது பி.சி.சி.ஐ., தலைவராக உள்ளார். கடந்த 2008ல் நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். இப்போட்டிக்கு கேப்டனாக இருந்த தோனி, மிகுந்த பெருந்தன்மையுடன் அணியை வழிநடத்தும் பணியை கங்குலிக்கு வழங்கினார்.

இந்த அனுபவம குறித்து கங்குலி கூறியது: நாக்பூர் டெஸ்டை மறக்க முடியாது. எனது கடைசி போட்டி என்பதால், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய போது, சக வீரர்கள் சூழ்ந்து கொண்டு கவுரவம் அளித்தனர். தோனியின் தலைமையில் எப்போதும் ஆச்சரியங்களுக்கு பஞ்சம் இருக்காது. இப்போட்டியின் கடைசி தருணத்தில் என்னை கேப்டனாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், எனது மனம் ஓய்வு பெறுவதையே சிந்தித்துக் கொண்டிருந்தது. கடைசி 3 அல்லது 4 ஓவர்களில் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை.

இவ்வாறு கங்குலி கூறினார்.

மூலக்கதை