முன்னிலை பெற்றது இங்கிலாந்து: சிப்லே, கிராலே அரைசதம் | ஜூலை 11, 2020

தினமலர்  தினமலர்
முன்னிலை பெற்றது இங்கிலாந்து: சிப்லே, கிராலே அரைசதம் | ஜூலை 11, 2020

சவுத்தாம்ப்டன்: விண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் டாம் சிப்லே, ஜாக் கிராலே அரைசதமடித்து கைகொடுக்க 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

கொரோனா காரணமாக தடை பட்ட கிரிக்கெட் மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204, விண்டீஸ் 318 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (10), சிப்லே (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

சிப்லே அரைசதம்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே ஜோடி நிதானமாக விளையாடியது. ஷனான் கேப்ரியல் வீசிய 16வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்ன்ஸ், கீமர் ரோச், ஜேசன் ஹோல்டர் ஆகியோரது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது ராஸ்டன் சேஸ் ‘சுழலில்’ பர்ன்ஸ் (42) சிக்கினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய சிப்லே, அரைசதமடித்தார். இவர், 50 ரன் எடுத்திருந்த போது கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார்.

தேநீர் இடைவேளைக்கு பின், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து, 116 ரன் முன்னிலையில் இருந்தது. ஜாக் கிராலே (69), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (31) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் சேஸ் 2, கேப்ரியல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

முதல் இன்னிங்சில் ‘வேகத்தில்’ அசத்திய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 14 ஓவரில், 49 ரன் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 150வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை இவர், 64 டெஸ்டில், 151 விக்கெட் சாய்த்துள்ளார்.

* தவிர இவர், பேட்டிங்கில் 4,099 ரன்கள் (9 சதம், 21 அரைசதம்) குவித்துள்ளார். இதனையடுத்து டெஸ்ட் வரலாற்றில் 4,000 ரன்கள் மற்றும் 150 விக்கெட் கைப்பற்றிய ‘ஆல்–ரவுண்டர்கள்’ பட்டியலில் இணைந்தார். ஏற்கனவே விண்டீசின் கேரி சோபர்ஸ் (8,032 ரன் மற்றும் 235 விக்கெட்), இந்தியாவின் கபில்தேவ் (5,248 ரன் மற்றும் 434 விக்கெட்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (13,289 ரன் மற்றும் 292 விக்கெட்), நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (4,531 ரன் மற்றும் 362 ரன்) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

 

பிராட் நீக்கம் குறித்து சக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில், ‘‘முதல் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டதால் விரத்தி, ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால், இவரை நீக்கியதால் அணியின் ‘பவுலிங்’ பலத்தை அறிய முடிந்தது,’’ என்றார்.

மூலக்கதை