ஒருநாள் அணியில் இடம் * ரகானே ஆர்வம் | ஜூலை 11, 2020

தினமலர்  தினமலர்
ஒருநாள் அணியில் இடம் * ரகானே ஆர்வம் | ஜூலை 11, 2020

புதுடில்லி: ‘‘மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற விரும்புகிறேன். எந்த இடத்திலும் களமிறங்கி பேட்டிங் செய்ய ஆர்வமாக  உள்ளேன்,’’ என ரகானே  தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே 32. இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் (2,962 ரன்) விளையாடிய இவரது சராசரி 35.26 ரன்னாக உள்ளது.  டெஸ்ட் அணி துணைக் கேப்டனாக உள்ள இவருக்கு சமீப காலமாக ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் இடம் கிடைப்பது இல்லை.

இதுகுறித்து அவர் கூறியது:

பொதுவாக எப்போதும் துவக்க வீரராக களமிறங்குவதை விரும்புவேன். ஒருவேளை அணியில் நான்காவது இடம் தான் கிடைக்கும்  என்றாலும் அதுகுறித்து கவலைப் படப் போவதில்லை. என்னால் எந்த இடத்திலும் சிறப்பாக விளையாட முடியும். ஒருநாள்  போட்டிகளில் துவக்கம் அல்லது நான்காவது இடம் என எதுவாக இருந்தாலும் களமிறங்கி விளையாடத் தயாராக உள்ளேன். என்னைப்  பொறுத்தவரையில் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற விரும்புகிறேன். இதற்கான வாய்ப்பு எப்போது வரும் எனத் தெரியவில்லை.  இருப்பினும் மூன்று வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க தயாராக உள்ளேன். 

‘டுவென்டி–20’ போட்டிகளை பொறுத்தவரையில் நான் யாரையும் பின்பற்றவில்லை. எனது திறமைக்கு ஏற்ப விளையாடுகிறேன். ஒருசில  ‘ஷாட்டுகள்’ நானாக உருவாக்கியவை. 

இவ்வாறு ரகானே கூறினார்.

மூலக்கதை