இந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை: ஜான் போல்டன்

தினமலர்  தினமலர்
இந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை: ஜான் போல்டன்

வாஷிங்டன்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்தால், சீனாவிற்கு எதிராக இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சீனா போர் குணத்துடன் செயல்பட்டு வருகிறது. தென் சீன கடல், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சீனாவின் உறவு சரிந்து கொண்டு வருகிறது. இந்தியா - சீனா இடையிலான பிரச்னையில் அவர் எந்த வழியில் செல்வார் என்பது எனக்கு தெரியாது. அவருக்கெ தெரியாது.சீனாவுடனான புவிசார் உறவை வணிகம் என்ற கண்களின் வழியேதான் டிரம்ப் பார்ப்பார். நவம்பர் தேர்தலுக்கு பின், டிரம்ப் என்ன செய்வார் என எனக்கு தெரியாது.


சீனாவுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராவார். இந்தியா - சீனா இடையே பிரச்னை அதிகரித்தால், எந்த பக்கம் சாய்வார் என்று தெரியாது. இந்தியா சீனா இடையே எல்லை பிரச்னை அதிகரித்தால், சீனாவிற்கு எதிராக இந்தியாவை டிரம்ப் ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்தியா சீனா இடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லை பிரச்னை குறித்த வரலாறு டிரம்ப்பிற்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை