தொழில்நுட்ப ரீதியாக சீனாவின் வர்த்தகத்தை முடக்குவது சாத்தியமா?

தினமலர்  தினமலர்
தொழில்நுட்ப ரீதியாக சீனாவின் வர்த்தகத்தை முடக்குவது சாத்தியமா?

வாஷிங்டன்: கொரோனாவின் தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இந்திய-சீன ராணுவ மோதல் காரணமாக சமீபத்தில் டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலியை முடக்க அரசு முடிவெடுத்தது.

சீனாவை வர்த்தக ரீதியில் முடக்க உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் டிக்டாக் ரசிகர்கள் பலர் உள்ளனர். இவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது 2020 தேர்தல் செயலுக்கு எதிர்மறை கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர் அமெரிக்கர்கள். டிக்டாக் செயலியை தடை செய்வதால் அதனை உருவாக்கிய சீன நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவைப் பரப்பிய சீனாவுக்கு தொழில்நுட்ப ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதே தற்போது வல்லரசு நாடுகளால் முடிந்த செயல். ஆனால் இது உண்மையில் சீன பொருளாதாரத்தை பாதிக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்ப்பதற்கு இல்லை. உலகின் பெரும் வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பம் ஆகியவற்றில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு பெரும் லாபம் ஈட்ட இந்த நாடுகள் முனைகின்றன. சீனா, ஹாங்காங்கில் தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருவதால் ஹாங்காங் சீன வர்த்தகத்தை புறக்கணித்து வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் சீனாவின் பொருளாதாரத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக சீனாவின் ஹுவே தொழில்நுட்ப நிறுவனத்தில் 5ஜி நெட்வொர்க்கை முடக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

5ஜி தொழில்நுட்பத்தில் சீனா முன்னோடியாகத் திகழக்கூடாது என்பதற்காக, அதற்குண்டான வேலைகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி வருகிறது. அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகெங்கிலும் கணினி உலகில் பெரும் சாதனை படைத்து வந்த போதிலும் சீனா தனக்கான தனி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி தங்கள் நாட்டு விஷயங்கள் இணையத்தில் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டது.

தற்போது அமெரிக்காவின் தொழில்நுட்ப தொல்லைகளை சமாளிக்க சீனா தனது நட்பு நாடுகளுடன் வர்த்தகம் செய்துவருகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைக்கொண்டு சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ரஷ்யா தன்னிச்சையாக செயல்படும் போதும், சீனாவுக்கு எதிராகவே உள்ளது. இவ்வாறாக உலக நாடுகள் தொழில்நுட்ப செயலிகளை தடைசெய்து சீனாவின் வர்த்தகத்தை குறைக்கப் பார்க்கின்றன.

மூலக்கதை