உத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
உத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை

வாஷிங்டன் :'ஆன்லைன்' வழியாக கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களை வெளியேற்ற, பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு, அமெரிக்க அரசுக்கு, 136 எம்.பி.,க்கள், 30 செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில், கொரோனா பரவல் காரணமாக, பல கல்வி நிலையங்கள், 'ஆன்லைன்' வழியாக, பகுதியாகவோ அல்லது முழுதுமாகவோ பாடங்களை நடத்த துவங்கியுள்ளன. 'இத்தகைய கல்வி மையங்களில் பயிலும், 'எப் - 1, எம் - 1' விசா மாணவர்கள், வழக்கமான முறையில் நடத்தப்படும் முழு பாடத் திட்டங்களில் சேர அனுமதியில்லை; அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்' என அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை, கடந்த, 6ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.



கடும் எதிர்ப்பு



இதனால், அமெரிக்காவில் அதிக அளவில் பயிலும், இந்திய, சீன மாணவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, அமெரிக்க கல்வி மையங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜனநாயகக் கட்சியின், இந்திய வம்சாவளியை சேர்ந்த, கமலா ஹாரிஸ், ராபர்ட் மென்டஸ், கோரி பூக்கர் உள்ளிட்ட, 30 செனட் உறுப்பினர்களும், 136 எம்.பி.,க்களும், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018 - 19ம் கல்வியாண்டில், வெளிநாடுகளை சேர்ந்த, 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், கல்வி பயில அமெரிக்கா வந்துள்ளனர். இவர்களில், 'ஆன்லைன்' வழி கல்வி பயிலும் மாணவர்களை வெளியேற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு, அபத்தமானது. மிகக் கொடூரமானது.தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையிலும், கல்வி மையங்களை திறந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்க முடியாது



அரசு, பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க முயற்சிக்காமல், குடியுரிமை இல்லாத வெளிநாட்டு மாணவர்களை, அரசியல் பகடை காய்களாக பயன்படுத்தி, கல்வி நிலையங்களை திறக்க நிர்பந்திக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உத்தரவால், சர்வதேச மாணவர்கள் கல்வி, பணம் உட்பட, பலவகையிலும் பெரும் பாதிப்பிற்கு ஆளாவர். இனி, அமெரிக்கா வரும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். அவர்கள் கல்வி பயின்று, தங்கள் திறமையால், அமெரிக்க சமுதாயம் முன்னேற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதனால், சர்வதேச மாணவர்களுக்கு எதிரான உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை