பிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020

தினமலர்  தினமலர்
பிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் கிரெய்க் பிராத்வைட், டவ்ரிச் அரைசதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் 318 ரன்கள் எடுத்த விண்டீஸ் அணி முன்னிலை பெற்றது.

கொரோனா காரணமாக தடை பட்ட கிரிக்கெட் மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

பின், முதல் இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல் (28), ஆண்டர்சன் ‘வேகத்தில்’ வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி ஒரு விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்திருந்தது. பிராத்வைட் (20), ஷாய் ஹோப் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிராத்வைட் அபாரம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் (16), டாம் பெஸ் ‘சுழலில்’ சிக்கினார். அபாரமாக ஆடிய கிரெய்க் பிராத்வைட், டெஸ்ட் அரங்கில் தனது 18வது அரைசதமடித்தார். அடுத்து வந்த ஷமர் புரூக்ஸ், டாம் பெஸ் வீசிய 39வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 42வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த பிராத்வைட் (65), அதே ஓவரில் அவுட்டானார்.

பின் களமிறங்கிய ராஸ்டன் சேஸ், மார்க் உட் வீசிய 47வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். நிதானமாக ஆடிய புரூக்ஸ் (39), ஆண்டர்சன் ‘வேகத்தில்’ வெளியேறினார். டாம் பெஸ் ‘சுழலில்’ ஜெர்மைன் பிளாக்வுட் (12) அவுட்டானார். ராஸ்டன் சேஸ் (47) ஆறுதல் தந்தார். ஷேன் டவ்ரிச் (61) அரைசதமடித்தார். கேப்டன் ஹோல்டர் (5) ஏமாற்றினார். ஜோசப் (18), கேப்ரியல் (4) நிலைக்கவில்லை.

முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்டாகி’, 114 ரன்கள் முன்னிலை பெற்றது. கீமர் ரோச் (1) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, டாம் பெஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

பொறுப்பாக ஆடிய கிரெய்க் பிராத்வைட், டெஸ்ட் அரங்கில் 22 இன்னிங்சிற்கு பின் அரைசதம் கடந்தார். கடைசியாக இவர், 2018ல் (ஜூலை) கிங்ஸ்டனில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன்மூலம் விண்டீஸ் துவக்க வீரர்களில் கீரன் பாவெலுக்கு (28 இன்னிங்ஸ், 2012–17) பின், அரைசதமடிக்க நீண்ட இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார்.

 

இப்போட்டியில் அம்பயர்களாக செயல்படும் இங்கிலாந்தின் ரிச்சர்டு கெட்டில்பரோ, இல்லிங்ஸ்வொர்த், பாரபட்சமாக செயல்படுவதாக தெரிகிறது. விண்டீஸ் கேப்டன் ஹோல்டர், 3 முறை செய்த அப்பீலை கெட்டில்பரோ மறுத்தார். ஆனால் ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் ‘அவுட்’ உறுதியானது.

இங்கிலாந்தின் ஆண்டர்சன் வீசிய ஓவரில், 2 முறை கேம்ப்பெலுக்கு அம்பயர் இல்லிங்ஸ்வொர்த் ‘அவுட்’ வழங்கினார். ஆனால், கேம்ப்பெல் ‘ரிவியூ’ செய்த போது ‘அவுட்’ இல்லை என தெரியவந்தது.

மூலக்கதை