நம்பிக்கைதானே எல்லாம்! பரிசோதனைகள் 'நெகட்டிவ்' ஆகும் :'பாசிட்டிவ்' ஆக நினைத்திருப்போம்

தினமலர்  தினமலர்
நம்பிக்கைதானே எல்லாம்! பரிசோதனைகள் நெகட்டிவ் ஆகும் :பாசிட்டிவ் ஆக நினைத்திருப்போம்

கோவை:கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி, நம் அனைவரையும் பாடாய்படுத்துகிறது. வேலை இழந்து, வருமானம் இழந்து, உயர் கல்வி, வேலை வாய்ப்புகள், வர்த்தக வாய்ப்புகள் இழந்து...மொத்தத்தில் அமைதியை இழந்து, துாக்கமிழக்க செய்து விட்டது. ஆனாலும், 'போராட்டம்தானே வாழ்க்கை... இதுவும் கடந்து போகும்...பழைய வாழ்க்கை விரைவில் மீண்டும் துளிர்க்கும்' என்று நம்பிக்கையுடன், அரசு விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்புடன் நாட்களை நகர்த்துவோம். தங்கள் பேச்சு, எழுத்துக்களால் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்டி வரும், நம் கோவை படைப்பாளிகள் இதைதான் வலியுறுத்துகின்றனர்.
கீழ்படிதலும் செயலறிவும்!கொரோனாவில் இருந்து, உலகத்தை காக்க யாரும் போராட வேண்டாம். முதலில் அவரவர் தங்களை காத்துக்கொண்டால் போதும். அரசு மற்றும் சுகாதார நிறுவனங்கள் சொல்லும் விதிமுறைகள் எல்லாம், யாருக்கோ சொல்வதாக நினைக்காமல், நாம் அதை பின்பற்ற வேண்டும். ஒன்றை நம்மால் நீக்க முடியாது என்றால், அதை தவிர்க்க முடியும். இதுதான் வாழ்வியல் எதார்த்தம். வாழ்க்கையில் சவால்களை சமாளிக்கத்தான் தன்னம்பிக்கை தேவை.
கொரோனாவை எதிர் கொள்ள, அது தேவையில்லை. இந்த நோயை எதிர்கொள்ள செயலறிவும், கீழ்படிதலும் இருந்தால் போதும்.-மரபின்மைந்தன் முத்தையா,தன்னம்பிக்கை எழுத்தாளர்.தன்னம்பிக்கையே அஸ்திவாரம்!இது போன்ற கொள்ளை நோய்களையும், அதனால் வரும் ஆபத்தையும் மக்கள் கடந்து வந்துள்ளனர். இன்றைக்கு கொரோனா நோய் சவாலாக வந்துள்ளது.
இதை பார்த்து பயம் வரக்கூடாது; பாதுகாப்பு உணர்வுதான் வர வேண்டும். கொரோனா பாதுகாப்பு குறித்து சொல்லப்படும் விதிமுறைகள் அனைத்தும், நம் பண்பாட்டில் கடைப்பிடித்து வந்தவைதான். வெளியில் சென்று வந்தால் கை, கால்களை கழுவுவது, கூட்டமான இடங்களுக்கு போய் வந்தால் குளிப்பது, கைகளை குலுக்குவதற்கு பதிலாக கையெடுத்து கும்பிடுவது போன்ற பழக்க வழக்கங்கள், நம்மிடம் இன்றும் உள்ளது. அதை தொடர்ந்து செய்வோம். கொரோனாவை கண்டு பயந்து முடங்கி விட வேண்டாம். தன்னம்பிக்கைதான் வாழ்க்கையின் அஸ்திவாரம். - கவிதாசன், தன்னம்பிக்கை சிந்தனையாளர்.இந்த நிலை நிரந்தரமில்லை!ஒரு தொற்று நோய் பரவுகிறது என்றால், மக்களுக்கு பயம் வரத்தான் செய்யும். அதுவும் கொரோனா, மனிதர்களை ஓடி ஒளிய வைத்து விட்டது. கொரோனா சோதனையில், நமக்கு 'பாசிட்டிவ்' வராமல் இருக்க வேண்டும் என்றால், நாம் 'பாசிட்டிவ்' ஆக சிந்திக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்கள் தரும் ஆற்றலும், உத்வேகமும் வேறு எதிலிருந்தும் கிடைக்காது.
இப்போது நம் அனைவருக்கும், மன அமைதிதான் முக்கியம். இந்த தனிமை காலத்தில் நல்ல நுால்களை படிக்கலாம்; நல்ல இசையை கேட்கலாம். இந்த சோதனையும் கடந்து போகும் என்ற நம்பிக்கைதான், இப்போதைக்கு தேவை. -முகில் தினகரன், நாவலாசிரியர்.
நல்ல வாய்ப்பாக கருதுவோம்!
கொரோனா பரவல் வந்த நாளில் இருந்து, நெடிகட்டிவ் ஆக பேசுபவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இதுதான் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 'வாட்ஸ்ஆப்' தகவல்களை பார்க்காமல், பகிராமல் இருப்பது நல்லது. சுய ஒழுக்கத்துடன் வீட்டுக்குள் இருப்பதுதான் இதற்கு தீர்வு என்றால், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டுக்கு வரவேண்டாம் என, கண்டிப்பாக சொல்லி விட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனம் விட்டு பேசி, சிரித்து மகிழ, இது ஒரு நல்ல வாய்ப்பு. மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தால், கொரோனா நம்மை கடந்து சென்று விடும். - மகேஸ்வரி சற்குரு, தன்னம்பிக்கை பேச்சாளர்.

மூலக்கதை