'தள்ளுபடி வேண்டும்!' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்

தினமலர்  தினமலர்
தள்ளுபடி வேண்டும்! வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்

திருப்பூர்:நம்மூர் ஆடி தள்ளுபடி போல், வெளிநாட்டு ஆடை வர்த்தகர்களும், தள்ளுபடி கேட்பதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், செய்வதறியாது தவிக்கின்றனர்.
கொரோனாவால், உலகளாவிய நாடுகளில், கடந்த மார்ச் மாதம் முதல், ஆடை வர்த்தகம் முடங்கியது. அதனால், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கிய வெளிநாட்டு வர்த்தகர்கள், தயாரித்த ஆடைகளை நிறுவனங்களிலேயே இருப்பு வைக்க அறிவுறுத்தினர்.ஏற்கனவே, அனுப்பப்பட்ட ஆடைகளும், வர்த்தகர்களால் எடுக்கப்படாமல், வெளிநாட்டு துறைமுகங்களில் தேக்கமடைந்தன. ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில், ஆடை வர்த்தகம் துவங்கியுள்ளது. வர்த்தகர்கள், ஏற்கனவே வழங்கிய ஆர்டர் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருகின்றனர்.சில வர்த்தகர்கள், கொரோனாவை காரணம்காட்டி, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து, 10 முதல் 20 சதவீதம் வரை, ஆடை விலையில் தள்ளுபடி கேட்கின்றனர்.விலை குறைப்புக்கு சம்மதித்தால், துறைமுகங்கள், நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆடைகளை பெற்று கொள்வதாகவும், இல்லாவிடில், பெறமுடியாது என்கின்றனர். வர்த்தகர் சிலரின் இந்த போக்கு, திருப்பூர் ஏற்றுமதி துறையினரை கவலை அடைய செய்துள்ளது.
வர்த்தகரை தக்க வைக்கவேறு வழியில்லை
இது குறித்து, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு வர்த்தகர் சிலர், ஏற்கனவே தயாரித்து அனுப்பிய, நிறுவனங்களில் இருப்பு வைத்துள்ள ஆடைகள் விலையை, அதிகபட்சம், 20 சதவீதம் வரை குறைக்கின்றனர்.விலை குறைப்புக்கு உடன்படாதபட்சத்தில், ஆடைகளை வாங்க மறுக்கின்றனர். ஒரு சிலர், ஜன., மாதத்துக்கு பின், வாங்கி கொள்வதாக கூறுகின்றனர்.இன்னும் சிலர், விலையில் தள்ளுபடி தந்தால் மட்டுமே எடுத்து கொள்வோம் என அடம் பிடிக்கின்றனர்.அவ்வாறு, தள்ளுபடி அளித்தால், நஷ்டத்தை சந்திக்க நேரிடும், கொடுக்காவிட்டால், ஆடைகளை வாங்க வர்த்தகர்கள் மறுத்து விடுவர்.
இது பெரிய நஷ்டத்தையே ஏற்படுத்தும். தற்போதைய சூழலில், நிறுவனம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, நிதி மற்றும் ஆர்டர் மிகவும் அவசியமாகிறது.வங்கி கடன்கள், ஜாப்ஒர்க் கட்டணம் வழங்க, ஆடையாக முடங்கியுள்ள கோடிக்கணக்கான ரூபாயை, மீட்பதும் முக்கியமாகிறது. வர்த்தகர்களுடனான நல்லுறவும் இன்றியமையாததாக உள்ளது. இதனால், வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விலையில் தள்ளுபடி அளிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கவலையுடன் கூறினர்.

மூலக்கதை