திருப்பதி ஏழுமலையான் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவு; 15.80 கோடி காணிக்கை; 2.63 லட்சம் பக்தர்கள் தரிசனம்...!!!

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவு; 15.80 கோடி காணிக்கை; 2.63 லட்சம் பக்தர்கள் தரிசனம்...!!!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்  செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் விதமாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊரடங்கு தளர்வு வழங்கி கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 11ம் தேதி முதல்  அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டது. மேலும், திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள் என தொடங்கி தற்போது 12500  பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவலை ஒட்டி நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஒரு மாதத்தில் உண்டியலில் 15.80 கோடி  ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். ஒரு லட்சம் பக்தர்கள் வரை மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இருப்பினும், திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது  சிகிச்சையில் உள்ளனர். இதனால், தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினந்தோறும் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆந்திரப்பிரதேசத்தில் தற்போது வரை கொரோனாவால் 25,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  292 பேர் உயிரிழந்த நிலையில், 13,194 பேர் குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை