காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் அதிரடி

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் அதிரடி

பாரமுல்லா: ஜம்முவின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதுகாப்புப் படையினர்  நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் அமைந்துள்ள பாராமுல்லா மாவட்டத்தின் நோகாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இயக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த இரண்டு ஏ.கே .47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக அந்நாட்டு படையினர் அடிக்கடி எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்கள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை