சியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்

தினமலர்  தினமலர்
சியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்

சியோல்:தென் கொரியாவில், தலைநகர் சியோலின் மேயர், பார்க் வன் சூன், தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத முடிவுக்கு அவர் மீது சுமத்தப்பட்ட, பாலியல் புகார் தான் காரணம் என, கூறப்படுகிறது.

மூன்று முறை சியோல் நகரின் மேயராக பதவி வகித்த, பார்க் வன் சூன், 2022ல், தென் கொரிய அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், பார்க் வன் சூன் மீது, அவரது முன்னாள் செயலர், பாலியல் புகார் தெரிவித்தார்.பல முறை, அலுவலகத்தில் உள்ள படுக்கை அறையில் விரசமாக பேசி, அத்துமீறியதாகவும், கட்டிப் பிடிக்க நிர்ப்பந்தம் செய்ததாகவும், தன் அரை நிர்வாண, 'செல்பி' படங்களை அனுப்பியதாகவும், அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.இந்த செய்தி, 'மீ டூ' இயக்கத்தின் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் மனம் உடைந்த, பார்க் வன் சூன், மறுநாள் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, வாடகைக் காரில், ஒரு மலையடிவார பூங்காவிற்கு சென்றுள்ளார். அதன் பின், அவரை காணவில்லை.

இது தொடர்பான புகாரை அடுத்து, நுாற்றுக்கணக்கான போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தேடிய போது, மலையில், பார்க் வன் சூன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.இந்த செய்தி, தென்கொரிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், பார்க் வன் சூன், இறப்பதற்கு முன், ஒரு கடிதத்தை எழுதிச் சென்றுள்ளது, அவர் மகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதில், 'இந்த முடிவிற்கு அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் வாழ்வில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.'என் குடும்பத்திற்கு இதுவரை, வேதனையைத் தான் தந்துள்ளேன். தயவு செய்து என் உடலை தகனம் செய்து, சாம்பலை, என் பெற்றோர் சமாதியில் துாவுங்கள்' என, பார்க் வன் சூன் குறிப்பிட்டுள்ளார்.சியோலில் வைக்கப்பட்டுள்ள அவரது சடலத்திற்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூலக்கதை