உலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

தினமலர்  தினமலர்
உலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

வாஷிங்டன்: உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2.28 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; 73 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 2,28,102 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக பாதிப்பை (2,12,326 பேர்) கடந்த ஜூலை 4ம் தேதி பதிவு செய்திருந்தது. அமெரிக்காவில் புதிய உச்சமாக, ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியது. அங்கு, பொருளாதார நடவடிக்கைகளை திறந்துவிடும் நோக்கில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தினமும் அசுர வேகத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னதாக ஜூலை 7ம் தேதி 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே அங்கு அதிகமாக இருந்தது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.35 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அங்கு இதுவரை 4 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக பாதிப்புள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (18 லட்சம் பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும் (8 லட்சம் பேர்) உள்ளன.

மூலக்கதை