காட்டு யானைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய கோரிய வழக்கு!: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
காட்டு யானைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய கோரிய வழக்கு!: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காட்டு விலங்குகளை விரட்ட வெடிபொருட்கள், கூர்மையான ஆயுதங்கள் பயன்பாட்டினை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் அன்னாசிபழத்தில் வெடிபொருள் வைத்து கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட நிகழ்வை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் காட்டு விலங்குகளை விரட்ட வெடிபொருட்கள், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் காட்டு யானைகளை கண்காணித்து அவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தமிழகம் - கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

மூலக்கதை