‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்

தினமலர்  தினமலர்
‛கொரோனா அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா' அச்சுறுத்தலையும் மீறி பார்லிமென்ட் தேர்தல் நேற்று(ஜூலை 10) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக ஓட்டளித்தனர்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்' கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் பார்லி தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.


ஒரு ஓட்டு சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை ஓட்டளித்தனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒட்டு சாவடியில் முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன.

மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு தனி இடம்:


கடந்த 2018ல் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் சிங்கப்பூர் பயணத்துக்குப் பின் தென்கிழக்கு ஆகிய நாடுகளின் சங்கத்தில் இந்தியாவுக்கு சிறப்பான தனி இடம் கிடைத்துள்ளது' என சிங்கப்பூருக்கான இந்திய துாதர் ஜாவேத் அஷ்ரப் தெரிவித்தார். கடந்த 43 மாதங்களாக சிங்கப்பூர் துாதராக பணியாற்றிய இவர் நாளை முதல் ஐரோப்பிய நாடான பிரான்சுக்கான இந்திய துாதராக பதவி ஏற்க உள்ளார்.

மூலக்கதை