8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்

தினமலர்  தினமலர்
8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது என்கவுன்டர்; தப்பியோட முயற்சித்தபோது மோதல்

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில், எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று தப்பி ஓடிய பிரபல ரவுடி விகாஸ் துபே, நேற்று கான்பூர் அருகே நடந்த, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது, இந்த அதிரடி சம்பவம் அரங்கேறியது.


உ.பி.,யில் 60க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபேயை, சமீபத்தில் கான்பூர் அருகேயுள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தபோது, போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது, எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று, விகாஸ் துபேயும், சக ரவுடிகளும் தப்பி ஓடினர். இதற்கிடையே, விகாஸ் துபேயின் கூட்டாளிகள் ஐந்து பேரை, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஒரு வாரமாக போலீசாருக்கு, 'தண்ணி' காட்டிய துபேயை, நேற்று முன்தினம், மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில், மஹாகால பைரவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது, அந்த மாநில போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு, உஜ்ஜைனிக்கு வந்த, உ.பி., போலீசாரிடம், விகாஸ் துபேயை, ம.பி., போலீசார் ஒப்படைத்தனர். அடுத்த கட்ட விசாரணைக்காக, துபேயை, கான்பூருக்கு காரில் அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவிலிருந்தே, கான்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நேற்று அதிகாலை, கான்பூர் அருகேயுள்ள பாவுந்தி என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, துபேயை அழைத்து வந்த கார், திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த போலீசாருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய துபே, காயமடைந்த போலீசாரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவர்களை நோக்கி சுட்டபடியே தப்பி ஓடினான். பதிலுக்கு, போலீசாரும் திருப்பிச் சுட்டனர்.

இதில், துபேயின் மார்பு, கை ஆகிய இடங்களில் குண்டுகள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். போலீசார், துபேயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவன் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, கான்பூர் போலீஸ் ஐ.ஜி., மோஹித் அகர்வால் கூறியதாவது: மழை பெய்ததால், துபேயை அழைத்து வந்த கார், சாலையில் கவிழ்ந்தது. இதைப் பயன்படுத்தி, போலீசாரின் துப்பாக்கியை பறித்து, தப்பி ஓட முயன்றான். போலீசாரை நோக்கி சுட்டான். தற்காப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில், துபே இறந்தான். கார் விபத்திலும், துபே சுட்டதிலும், சில போலீசார் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


கோர்ட்டில் மனு:


இந்த என்கவுன்டர் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஞானஷ்யாம் உபாத்யாயா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'ரவுடி விகாஸ் துபே, போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. துபேயிடம் விசாரணை நடத்தினால், அவனுக்கு உதவியவர்கள் பற்றிய விபரம் தெரிய வரும். எனவே, அவனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

குற்றச்சாட்டு:


உ.பி.,யில் உள்ள சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த, 'என்கவுன்டர்' குறித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. 'விகாஸ் துபேக்கு எதிரான வழக்கை சட்டப்படி விசாரித்திருந்தால், அவனுக்கு உதவிய அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும். அவர்களை பாதுகாப்பதற்காகவே, துபேயை அவசரம் அவசரமாக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்' என, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய பிரதேசத்திலிருந்து, துபே, வேறு ஒரு காரில் அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால், விபத்தில் சிக்கியதாக கூறப்படும் கார், வேறோரு காராக இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். மேலும், கார் விபத்துக்குள்ளான இடத்தில், சாலையில் எந்தவிதமான மேடு, பள்ளமும் இல்லாத நிலையில், கார் கவிழ்ந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடவடிக்கை எப்போது?


கான்பூரை கலக்கிய ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஆனால், அவனை பாதுகாத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என தெரியவில்லை.
- பிரியங்கா, பொதுச் செயலர், காங்.,

திட்டமிட்டு கவிழ்க்கப்பட்ட கார்!


துபேயை அழைத்து வந்த கார், கவிழ்ந்ததாக கூறுகின்றனர். ஆனால், என்கவுன்டர் நடத்துவதற்காகவும், ஆட்சி கவிழாமல் இருப்பதற்காகவுமே, அந்த கார், திட்டமிட்டு கவிழ்த்தப்பட்டதாக தெரிகிறது.
- அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

விசாரணை தேவை!


விகாஸ் துபே என்கவுன்டர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதற்கு விடை தெரிய வேண்டுமானால், இது குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் கீழ், விசாரணை நடத்த வேண்டும்.
- மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்


யார் இந்த விகாஸ் துபே?


விகாஸ் துபே, 50, சாதாரண அடிதடியில் துவங்கி, படிப்படியாக ஆள் கடத்தல், கொலை என, உ.பி.,யின் கான்பூர் பகுதியில் தாதாவாக வலம் வந்தான். சிவிலி போலீஸ் ஸ்டேஷனில், 2001ல், பா.ஜ., பிரமுகர் சந்தோஷ் சுக்லா கொல்லப்பட்ட வழக்கில், துபே, முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டான். அப்போது, துபேயின் மிரட்டலுக்கு பயந்து, ஸ்டேஷனில் இருந்த ஒரு போலீசார் கூட, அவனுக்கு எதிராக சாட்சி அளிக்க முன்வரவில்லை. இதனால், அந்த வழக்கிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான்.

கான்பூர், தாராசந்த் கல்லுாரி மேலாளர், தொழில் அதிபர் தினேஷ் துபே உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில், விகாஸ் துபே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. துபேயும், அவனது மனைவியும் உள்ளாட்சி தேர்தல்களில் வேட்பாளர்களாக நின்று, அரசியலிலும் கால் பதிக்க முயற்சித்தனர். துபேயின் சட்டவிரோத செயல்களுக்கு, அரசியல்வாதிகளின் முழு ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது

.உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஒருவருடன், துபே நின்றிருப்பது போன்ற புகைப்படம், சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், 'துபேக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவன், சமாஜ்வாதி கட்சியில் உறுப்பினராக இருந்தான்' என, உள்ளூர், பா.ஜ., வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியினரோ, 'துபே, எங்கள் கட்சி உறுப்பினர் இல்லை. தவறான தகவல்களை பரப்புகின்றனர்' என்கின்றனர். துபேயின் தாயார், 'என் மகன், சமாஜ்வாதி கட்சியில் இருந்தான்' என, உறுதிப்படுத்தியுள்ளார்.

மூலக்கதை