கேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
கேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,950 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று எண்ணிக்கை வந்த நிலையில் இன்று (ஜூலை 10) இது வரை இல்லாத அளவாக புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக உள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 123 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 51 பேருக்கும், தொற்று மூலாக 204 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர்.

இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 129 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 50 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 41 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 32 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் 28 பேர் தலா பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களையும், 20 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 17 பேர் திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களையும், தலா 12 பேர் இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களையும், 7 பேர் கோட்டயம் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.


இன்று ஒரே நாளில் 112 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 11,693 சோதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,84,112 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 3,517 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று மட்டும் 472 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை