பொலிவியா அதிபருக்கு கொரோனா: 14 நாட்கள் வீட்டிலேயே தனிமை

தினகரன்  தினகரன்
பொலிவியா அதிபருக்கு கொரோனா: 14 நாட்கள் வீட்டிலேயே தனிமை

சுக்ரே: பொலிவியா இடைக்கால அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் இதுவரை 44 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,600க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளனர். பொலிவியா நாட்டின் அதிபராக இருந்த ஈவோ மோரலஸ், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை  விட்டு வெளியேறியதால், கடந்த 2019 நவம்பர் மாதம் இடைக்கால அதிபராக  ஜீனைன் அனெஸ் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபரான ஜீனைன் அனெசிற்கு (53) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜீனைன் அனெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைகளின்படி 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.  அதேபோல், பொலிவியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மற்றொரு அமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னைக்கு மத்தியில் வரும் இரண்டு மாதங்களுக்குள் பொலிவியா நாட்டில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இதற்கிடையே இடைக்கால அதிபர் கொரோனா தொற்றில் சிக்கியுள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு ஆளாவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை