கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.42 சதவீதமாக உயர்வு..: மத்திய சுகாதாரத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.42 சதவீதமாக உயர்வு..: மத்திய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,296-லிருந்து 7,93,802-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,129-லிருந்து 21,604-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,378-லிருந்து 4,95,513-ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,76,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் விகிதம் 2.72 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 1,218 கொரோனா மருத்துவமனைகள், 2,705 சுகாதார மையங்கள் செயல்படுகின்றன என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவலை இல்லை. அதிகபட்ச பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக, சோதனைகளை அதிகரித்து வருகிறோம். தினமும் சுமார் 2.7 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா மிகப்பெரிய நாடாக இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டவில்லை. சில பகுதிகளில் மட்டும் பரவல் அதிகமாக உள்ளது, என கூறியுள்ளார்.

மூலக்கதை