ஹைட்ராக்சி குளோரோகுயின் எனக்கு வேலை செய்கிறது; பிரேசில் அதிபர்

தினமலர்  தினமலர்
ஹைட்ராக்சி குளோரோகுயின் எனக்கு வேலை செய்கிறது; பிரேசில் அதிபர்

பிரேசிலியா: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ, தினமும் ஒரு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அது தனக்கு வேலை செய்கிறது என்றும் கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசில் தற்போது கொரோனா வைரசின் மையப்புள்ளியாக உள்ளது. 21 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் 18 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் உயிரிழக்கின்றனர், கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலத்தில் கவர்னர்கள் போட்ட ஊரடங்கினை இவர் விமர்சித்து வந்தார். கொரோனா வைரஸை விட அதன் இணை பாதிப்புகளான பொருளாதார பிரச்னைகள் மோசமானது என்று கூறினார். முகக்கவசங்கள் ஏதும் அணியாமல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். கோர்ட் அபராதம் விதித்து முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார்.

65 வயதாகும் அதிபர், தனது கொரோனா அனுபவம் பற்றி பேஸ்புக் மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: நான் இதை மிகத் தெளிவாகச் சொல்கிறேன். ஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்துக்கொண்டேன். அது வேலை செய்தது. நான் நன்றாக இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி. இதனை விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கான மருந்தான இது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்கா தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை