மெலனியா டிரம்பின் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

தினமலர்  தினமலர்
மெலனியா டிரம்பின் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

ஜுப்லிஜானா: ஸ்லோவேனியாவில் செவ்னிகா அருகே அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவின் முழு உருவ சிலையை மர்மநபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனையடுத்து மெலனியா சிலை அகற்றப்பட்டது.


மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவின் செவ்னிகா அடுத்த நோவோ மெஸ்டோவில் 1970ம் ஆண்டில் பிறந்தவர் மெலனியா டிரம்ப் (50) . பிரபல மாடலாக வலம் வந்த மெலனியாவை கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் 3வது மனைவியாக மணந்து கொண்டார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண்மணியாகவும் மெலனியா உயர்ந்தார்.

அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து உயரிய இடத்தை அடைந்த மெலனியாவை பாராட்டும் விதமாக செவ்னிகா அருகே லிண்டர் மரத்தில் முழு உருவத்தை உள்ளூர் கலைஞர் அலெஸ் ஜூபெவ்க் செதுக்கியிருந்தார். சிலையின் முகம் கரடுமுரடானதாகவும், அடையாளம் காணமுடியாததாகவும் இருந்தபோதிலும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற போது மெலனியா டிரம்ப் அணிந்திருந்த நீல நிற ஆடையின் வண்ணம் மர சிலைக்கும் பூசப்பட்டிருந்தது.ஜூலை 5ம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடியதற்கு முதல் நாளான ஜூலை 4ம் தேதி இரவில் மர்மநபர்கள் சிலர் மெலனியாவின் மர சிலைக்கு தீ வைத்துள்ளனர்.

பெர்லினை சேர்ந்த அமெரிக்க கலைஞரான பிராட் டவுனி, 'இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை 5 ஆம் தேதி போலீசார் தெரிவித்த உடன், மெலனியாவின் முழு உருவ மரசிற்பம் அகற்றப் பட்டது. ஏன் அப்படி செய்தார்கள் என்பது குறித்து தெரியவேண்டும். போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களிடம் வீடியோ நேர்காணல் செய்ய விரும்புகிறேன். ஸ்லோவேனியாவில் செப்டம்பரில் துவங்க இருக்கும் கண்காட்சிக்கு தயாராகி வருகிறேன்' என கூறியுள்ளார்.


விசாரணை முடிவடையாததால் தற்போதைய நிலையில் எதுவும் கூற முடியாது என ஸ்லோவேனியா போலீசார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு மரணத்தை தொடர்ந்து இனவெறிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவின் வரலாற்று சின்னங்களை அழிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்லோவேனியாவில் மெலனியா சிலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாஷிங்டனில் உள்ள மெலனியாவின் அலுவலகம் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

மூலக்கதை