ஹோல்டர் ஆறு... விண்டீஸ் ஜோரு * இங்கிலாந்து அணி திணறல் | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
ஹோல்டர் ஆறு... விண்டீஸ் ஜோரு * இங்கிலாந்து அணி திணறல் | ஜூலை 09, 2020

சவுத்தாம்ப்டன்: முதல் டெஸ்டில் கேப்டன் ஹோல்டர் ஆறு விக்கெட் வீழ்த்த, விண்டீஸ் அணி ஜோரான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

கொரோனா காரணமாக தடை பட்ட கிரிக்கெட் மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து அணி சொந்தமண்ணில் விண்டீசிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. 

மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (20), டென்லே (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

சரிந்த ‘டாப்’

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் நாள் ஸ்கோருடன் கூடுதலாக 4 ரன் மட்டும் எடுத்த டென்லே (18), கேபிரியல் ‘வேகத்தில்’ போல்டானார். தொடர்ந்து மிரட்டிய இவர், பர்ன்சை (30) வெளியேற்றினார். மறுபக்கம் கிராலே 10 ரன்னுக்கு ஹோல்டரிடம் ‘சரண்’ அடைந்தார்.

ஹோல்டர் அபாரம்

ஹோல்டர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த போப் (12), அவரிடமே வீழ்ந்தார். இங்கிலாந்து அணி 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஸ்டோக்ஸ், பட்லர் இணைந்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது ஸ்டோக்சை (43) அவுட்டாக்கினார் ஹோல்டர்.

தொடர்ந்து அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹோல்டர், பட்லரை (35) பெவிலியன் அனுப்பினார். அடுத்து வந்த ஆர்ச்சரை ‘டக்’ அவுட்டாக்கிய இவர், மார்க் உட்டையும் (5) விரைவில் வீழ்த்தினார். கடைசியாக ஆண்டர்சன் (10) அவுட்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விண்டீசின் ஹோல்டர் 6, கேபிரியல் 4 விக்கெட் சாய்த்தனர். 

அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு கேம்பெல், பிராத்வைட் ஜோடி துவக்கம் கொடுத்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கிய போது, கேம்பெல் (28) அவுட்டானார். முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது.  பிராத்வைட் (16), ஹோப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

5

டெஸ்ட் அரங்கில் முதல் இன்னிங்சில், சக பீல்டர்கள் உதவியில்லாமல் எதிரணியின் ‘டாப்–3’ விக்கெட்டுகளை வீழ்த்திய நிகழ்வு நேற்று 5வது முறையாக நடந்தது. விண்டீஸ் பவுலர் கேபிரியல், இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகளை (பர்ன்ஸ், சிப்லே, டென்லே) சாய்த்தார். 

இதற்கு முன் இங்கிலாந்தின் பீப்பிள்ஸ் (1931, எதிர்–நியூசி.,), அலெக் பெட்செர் (1953, ஆஸி.,), இந்தியாவின் கும்ளே (2004, தெ.ஆப்.,), இலங்கையின் சானகா (2009, இந்தியா) இதுபோல சாதித்தனர்.

 

7

முதல் டெஸ்டில் விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 42 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தினார். இது இவரது ‘பெஸ்ட்’ பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன் 2018ல் வங்கதேசத்துக்கு எதிராக 59 ரன்/6 விக்கெட் சாய்த்தே சிறந்ததாக இருந்தது. 

* கடைசி 10 டெஸ்டில் 5 விக்கெட் அல்லது அதற்கும் மேல் என இவர் 7வது முறையாக சாய்த்தார். 

* முதல் 31 டெஸ்டில் 56 விக்கெட் வீழ்த்திய ஹோல்டர், கடந்த 10 டெஸ்டில் 56 விக்கெட் கைப்பற்றினார். 

 

1000

நேற்று 21 ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் பர்ன்ஸ். இந்த இலக்கை எட்டிய 30வது இங்கிலாந்து வீரர் ஆனார். தவிர 2007ல் அலெஸ்டர் குக்கிற்கு பின் 1000 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி துவக்க வீரர் இவர் தான். 

 

விண்டீஸ் அம்பயர் வரலாமே

கொரோனா காரணமாக உள்ளூர் அம்பயர்களை நியமிக்க ஐ.சி.சி., அனுமதித்தது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்தின் ரிச்சர்டு கெட்டில்பரோ, இல்லிங்ஸ்வொர்த் என 20 ஆண்டு அனுபவம் வாய்ந்த இருவரும் அம்பயர்களாக உள்ளனர். 

இருப்பினும் ஹோல்டர் மூன்று முறை செய்த அப்பீலை, கெட்டில்பரோ மறுத்தார். ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் மூன்று முறையும் அவுட் உறுதியானது. இதனால் அடுத்த டெஸ்டில் விண்டீஸ் அணியினர் தங்களது அம்பயர்களை கொண்டு வரலாம் என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் காமெடி செய்கின்றனர்.

மூலக்கதை