சமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை குறைக்கிறது

தினமலர்  தினமலர்
சமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை குறைக்கிறது

கலிபோர்னியா: முகக்கவசம் அணிவது கொரோனா பாதிக்கும் அபாயத்தை 65 சதவீதமும், சமூக இடைவெளி 90 சதவீதமும் குறைத்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை முறையான தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், முகக்கவசமும், சமூக இடைவெளியும் தான் உலக நாடுகள் முழுக்க தடுப்பு மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றன. இது எந்த அளவு சிறப்பாக கொரோனாவை தடுக்கிறது என கலிபோர்னிய பல்கலைக்கழக டேவிஸ் குழந்தைகள் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் இந்த இரண்டு வழிமுறைகளையும் முறையாக பின்பற்றினால் கொரோனா அபாயம் பெருமளவு குறையும் என தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வாளர்கள் கூறியதாவது: முகக்கவசம் அணிவது நோய்வாய்ப்பட்ட நபரிடம் வைரஸ் பரவுவதை தடுப்பதோடு, ஆரோக்கியமான மக்களையும் நோய்க்கு ஆளாகாமல் தடுக்கிறது. முகக்கவசங்கள் வேலை செய்வதாக நான் நம்பவில்லை என்பவர்கள் அறிவியல் ஆதாரங்களை புறக்கணிப்பவர்கள் ஆவர். இது ஈர்ப்பு விசையை நான் நம்பவில்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். இரண்டு முறைகளில் கொரோனா வைரஸ் பரவுகிறது. ஒன்று இருமும்போது அல்லது தும்மும்போது காற்றில் வெளியேற்றப்படும் நீர்த்துளிகள் வழியாகவும், இரண்டாவது நாம் பேசும்போது காற்றில் தெளிக்கும் துகள்கள் வழியாகவும் பரவுகிறது.


தும்மும்போது வெளியேற்றப்படும் நீர்த்துளிகள் மனித முடியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். இருப்பினும் இதனை கண்களால் காணலாம். பேசும் போது தெளிக்கும் துகள்கள் மனித முடியின் நூற்றில் ஒரு பங்கு அளவு தான் இருக்கும். இது கண்களுக்கு தெரியாது. இது தான் மிகவும் ஆபத்தானது. வாசனை எப்படி ஒரு அறைக்குள் பரவுகிறதோ அந்த வேகத்தில் பரவும். நெரிசலான உட்புற இடங்களைத் தவிர்ப்பதன் மூலம் இதனை குறைக்க முடியும். நல்ல காற்றோட்டம் வைரஸை கலைக்கும். சமூக நிகழ்வுகள் வெளிப்புறங்களில் நடப்பது நல்லது. வீட்டிலும் ஜன்னல்களை திறந்து நல்ல காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.

பல்வேறு வகையான முகக்கவசங்கள் சுவாச மண்டலத்திற்குள் நீர்த்துளிகள் வருவதைத் தடுக்கும். ஒருவர் பேசும் போது 20 முதல் 500 மைக்ரோ மீட்டருக்குள் வெளியேற்றப்படும் நீர்த்துளிகள், துணி முகக்கவசம் அணிந்திருந்தாலே நமக்குள் நுழையாமல் தடுக்கும். சமூக இடைவெளி வைரஸ் பரவும் அபாயத்தை 90 சதவீதமும், முகக்கவசம் 60 சதவீதமும் குறைக்கிறது. உங்கள் குடும்பத்தினர், நண்பர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், அல்லது உங்கள் சமூகத்தைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், முகக்கவசம் அணியுங்கள். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை