கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; இந்தியா, அமெரிக்கா கூட்டு முயற்சி

தினமலர்  தினமலர்
கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; இந்தியா, அமெரிக்கா கூட்டு முயற்சி

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு மருந்து தயாரிக்கும் பரிசோதனையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இத்தகவலை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்தூ, பிரபல இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவுடன் புதன்கிழமை ஒரு மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது: மலிவு விலை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிப்பில் இந்திய மருந்து நிறுவனங்கள் உலகின் முன்னோடிகளாக உள்ளன. மேலும் இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்க மற்றும் இந்திய தடுப்பூசி நிறுவனங்களிடையே குறைந்தது மூன்று கூட்டு ஒப்பந்தங்கள் உள்ளன. இதன் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பயன் கிடைக்கும். முக்கியமான நோய்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல திட்டங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். சுகாதாரத் துறையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்டகால ஒத்துழைப்பு உள்ளது.


ஆயுர்வேதத்தை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் பயிற்சித் திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. இரு நாடுகளிலும் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக ஆயுர்வேத மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக நம் விஞ்ஞானிகள் அறிவு மற்றும் ஆராய்ச்சி வளங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை