பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்: அதிர்ச்சி வீடியோ

தினமலர்  தினமலர்
பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்: அதிர்ச்சி வீடியோ

இஸ்லாமாபாத்: ‛பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஹிந்து கோவில் கட்டப்பட்டால், அனைத்து ஹிந்துக்களையும் ஒவ்வொருவராக கொல்வேன்' என 4 வயது சிறுவன் பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், முதல் முறையாக கிருஷ்ணர் கோவில் கட்ட, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதற்கு, பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்கவும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும், பாக்., நீதிமன்றம் நேற்று முன்தினம், தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தாடி வைத்துள்ள நபர், தனது மகன் பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு ஒன்றை சொல்ல விரும்புவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‛கான்சாகிப். ஒருவேளை இஸ்லாமாபாத்தில் ஹிந்து கோவில் கட்டி முடிக்கப்பட்டால், ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். நான் ஒவ்வொரு ஹிந்துவையும் கொலை செய்வேன். புரிகிறதா? அல்லா உங்களை காப்பாற்றுவாராக' என சிறுவன் பேச, அருகில் நிற்கும் மற்றொரு பிஞ்சு குழந்தையும் அதை ஆமோதிக்கிறது.

பிஞ்சு சிறுவனின் மனதில் தந்தையே நஞ்சை விதைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுவதற்கு இதுவே காரணமென இந்தியர்கள், சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை மேற்கோள் காட்டி வருகின்றனர்.

மூலக்கதை