நேபாளத்தில் பதவியை காப்பாற்ற ஷர்மா ஒலி முயற்சி

தினமலர்  தினமலர்
நேபாளத்தில் பதவியை காப்பாற்ற ஷர்மா ஒலி முயற்சி

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, பதவி விலக கோரி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கொரோனா காரணமாக சுகாதார அவசர நிலையை அமல்படுத்த, ஜனாதிபதி பண்டாரியுடன், ஷர்மா ஒலி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவின் காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலெக் கணவாய் பகுதிகளை உரிமை கொண்டாடி வரும் நேபாளம் புதிய வரைபட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. தொடர்ந்து தன்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பதாக, இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பதவி விலக வேண்டும் என நேபாள கம்யூ. கட்சி துணை தலைவரான பிரசண்டா வலியுறுத்தி வருகிறார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க சுகாதார அவசர நிலையை பிறப்பிக்க ஷர்மா ஒலி முயற்சித்து வருகிறார். ஆனால் நேபாள ஜனாதிபதி பண்டாரி, அவசர நிலையை அமல்படுத்த மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நேபாள கம்யூ., கட்சியில் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி கேட்டுகொண்டுள்ளார். நேபாள ராணுவமும் அவசர நிலைக்கு வீரர்களை அனுப்புவதில் ஆதரவாக இல்லை.

இதனிடையே, பிரதமர் ஒலி, அரசியல் வேறுபாடுகளை தீர்ப்பதற்காக நேபாள கம்யூ., கட்சியின் இணை தலைவரான பிரசண்டாவை இன்று சந்திப்பதாக இருந்தது. ஆனால் பிரசண்டா, கட்சி பிளவுப்படும் சூழல் வந்தாலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். நேற்று இருவரும் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடத்திய ஆலோசனையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

நாளை நேபாள கம்யூ., கட்சியின் நிலைக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள் சர்மா ஒலிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். இருந்தாலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சர்மா ஒலி மற்றும் பிரசண்டா ஆகிய இருவரின் கையெழுத்து தேவை. ஒருவேளை நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அடுத்ததாக மத்திய குழுவுக்கு செல்லும். அங்கும் ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.


நேபாள கம்யூ., கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கி, ஆளும் கம்யூ., கட்சி தலைவர்கள், தங்கள் வேறுபாடுகளை கடந்து ஷர்மா ஒலி அரசை காப்பாற்ற அழுத்தம் கொடுத்துள்ளார். ஹூ யான்கியை சந்தித்த நேபாள என்.சி.பி தலைவர், ஷர்மா ஒலிக்கு எதிரான தீர்மானத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்குமா அல்லது வேறு நடவடிக்கை ஏதேனும் எடுக்குமா என வினவியுள்ளார். ஷர்மா ஒலி இன்றியும் கட்சி வலுவாக இருக்குமெனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நேபாள உள்நாட்டு விவகாரங்களில் சீன தூதர் ஹூ யான்கி தலையிட்டு வருவது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. மாவோ கொள்கையை பின்பற்றினாலும் பெரும்பாலான நேபாள கம்யூ.,கட்சி தலைவர்கள் ஜனநாயகவாதிகள் என்பதுடன், இந்து மத சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆவர். நேபாள பிரதமர் ஷர்மா ஒலியை காப்பாற்ற சீனா கபட நாடகம் ஆடுவதால், அரசியல் நெருக்கடி தொடருமென கூறப்படுகிறது.

மூலக்கதை