சீனா கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளித்தது எப்படி?

தினமலர்  தினமலர்
சீனா கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளித்தது எப்படி?

பெய்ஜிங்: கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் 4,500 பேரது உயிரை பலி வாங்கியது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் அப்போது அறிவித்தார்.

பின்னர் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவை முழுவதுமாக ஆட்கொண்டது. தற்போது கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா. சீனாவில் படிப்படியாக வைரஸின் தாக்கம் குறைந்து மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சீனாவில் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியது. இதனை முன்னரே கணித்த சீனா சாமர்த்தியமாக இதனை முடக்கி சாதனை படைத்துள்ளது. எப்படி என கேட்கிறீர்களா?

கடந்த ஜூன் மாதம் முதலே சீனா கொரோனாவின் இரண்டாவது அலைக்குத் தயாராகிவிட்டது. அதற்கேற்றார்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியது. பொருளாதாரத்தை மேம்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில்களை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து சமூக விதிகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து பலர் தங்கள் தொழில்களைச் செய்துவந்தனர்.

தலைநகர் பெய்ஜிங்கில் முதற்கட்டமாக வீட்டுக்கு வீடு சோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 கோடி மக்கள்தொகை கொண்ட பெய்ஜிங் நகரில் மருத்துவ ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா அதிகமாக உள்ள மாகாணங்களிலிருந்து பிற மாகாணங்களுக்கு மக்கள் செல்வது தடுக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சீன அரசு உத்தரவிட்டது.

இந்தத் தடை உத்தரவை சீனர்கள் கண்டிப்பாகப் பின்பற்றினர். பொது இடங்களில் சமூக விலகலைக் கடைபிடித்தனர். இதனால் ரெஸ்டாரெண்ட்கள், பப்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல பொது இடங்கள் திறக்கப்பட்டாலும் அங்கு சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்துறையும் செயல்பட சீன அரசு அனுமதி அளித்தது.

இதனால் சீனாவின் பொருளாதாரம் மேம்பட்டது. மொத்த கொள்முதல் உற்பத்தி உயர்ந்து, நாட்டின் வருவாயும் அதிகரித்தது. இவ்வாறாக சீனா கொரோனாவின் இரண்டாவது அலையை மிக எளிதில் கடந்துவிட்டது. இது உலக நாடுகளை வியக்கச் செய்துள்ளது.

சீனாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டாலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. பயணத்துக்குப் பின் பதினைந்து நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. நகரில் தேவைக்கு அதிகமாக உள்ள மதுபான விடுதிகள் மூட வலியுறுத்தியது.

தெற்கு பெய்ஜிங்கில் உள்ள ஃசின்ஃபடி சந்தையில் 335 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த சந்தை உடனடியாக மூடப்பட்டது. அங்கிருந்து ஏற்றுமதியாகும் சால்மன் மீன்கள் தடைவிதிக்கப்பட்டது. சந்தைக்குச் சென்றுவந்த நபர்களை சிசிடிவி காமிரா மூலம் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் அந்த சந்தையில் இருந்து ஏற்பவிருந்த கொரோனா பரவல் உடனடியாகத் தடுக்கப்பட்டது.

'உலகில் எந்த நாட்டுக்கும் சீனாபோல கொரோனாவை சாமர்த்தியமாகக் கையாளும் பொருளாதார வலிமை, சாதுர்யம், மருத்துவ வசதி கிடையாது' என சிங்கப்பூர் நோய்த்தொற்று தடுப்பு வல்லுநர் லியாங் ஹோ நாம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை