நாம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கும் விலங்குகள் மீதான சோதனை முடிந்தது; விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்படும்: மத்திய சுகாதாரத்துறை!!

தினகரன்  தினகரன்
நாம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கும் விலங்குகள் மீதான சோதனை முடிந்தது; விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்படும்: மத்திய சுகாதாரத்துறை!!

டெல்லி : கொரோனாவுக்கான 2 தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, \'நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாகவே உள்ளது. உலகிலேயே மக்கள் தொகையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. 138 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் 538 மட்டுமே. அதே நேரத்தில், உலக சராசரி இதை விட16-17 மடங்கு அதிகமாக உள்ளது.அதே போல், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கோவிட்-19 இறப்பவர்கள் எண்ணிக்கை 15. உலக சராசரி இதை விட 40 மடங்கு அதிகமாக உள்ளது. கொரோனாவின் விவகாரத்தை நாம் சிறப்பாக கையாண்டு வந்துள்ளோம். இந்தியாவில் கொரோனா பரவல் சுமூகப் பரவலை எட்டவில்லை.. இருப்பினும் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும்  கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாங்கள் நாளொன்றுக்கு 2.6 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். ஆன்டிஜென் சோதனையைப் பயன்படுத்துவதன் மூலம் பரிசோதனை எண்ணிக்கை மேலும் உயரும் என்று நம்புகிறோம். பாரத் பயோடெக் மற்றும் சைடஸ் காடிலா ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டது. இதில் வெற்றி அடைந்ததையடுத்து 2 தடுப்பூசிகளையும் கட்டம் 1 & 2 மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த டி.சி.ஜி.ஐ அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசியின் மருத்துவ ரீதியான சோதனை விரைவில் தொடங்கும்.\' என்றார்.

மூலக்கதை