தங்கம் கடத்தல் விவகாரம்; மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை...பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!!!

தினகரன்  தினகரன்
தங்கம் கடத்தல் விவகாரம்; மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை...பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சம்மந்தப்பட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக  தூதரகத்துக்கு வந்த பார்சலில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் கடந்த 3 நாட்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக  பணிபுரிந்த சரித்குமார் கைதானார். விசாரணையில், தூதரக நிர்வாக செயலாளராக பணியாற்றிய சொப்னா சுரேஷுக்கு கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சொப்னா சுரேஷ் 4 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தில் நிர்வாக செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்த நான்கு ஆண்டுகளில் இவர் கேரள அரசின் முக்கிய அதிகாரிகளுடனும், அரசியல் பிரமுகர்களுடனும் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதுபோல் தூதரகத்திலும் சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்துள்ளார். இதை பயன்படுத்தி தான் தங்கம் கடத்தலில் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இவருக்கும் முதல்வருக்கும் சம்மந்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசு கட்சிகள் முதல்வர் பதவி விலக வேண்டும் என போராட்டங்களை நடத்தி வருகினறனர்.இந்நிலையில்தான், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,  இந்த கடத்தலில் பல்வேறு கோணங்கள் இருப்பதால் அனைத்து விதத்திலும் முழுமையான விசாரணை தேவை என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த குற்ற சம்பவத்திற்கு தொடர்புடைய அனைத்தையும் வேரறுக்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அனைத்து மத்திய அமைப்புகளும் விசாரணை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த விசாரணைக்கு கேரள அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை