உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கு...: பிரபல ரவுடி விகாஸ் துபேவை அதிரடியாக கைது செய்தது ம.பி காவல்துறை!

தினகரன்  தினகரன்
உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கு...: பிரபல ரவுடி விகாஸ் துபேவை அதிரடியாக கைது செய்தது ம.பி காவல்துறை!

உஜ்ஜைன்: : உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பிரபல ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவன் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 3ம் தேதி நள்ளிரவு அவனை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது, அவனும், அவனுடைய கூட்டாளிகளும் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியானார்கள். போலீஸ் துப்பாக்கி சூட்டில் விகாஸ் துபே கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து, விகாஸ் துபேவுக்கு நெருக்கமான 5 பேர் கைது செய்யப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரவுடி விகாஸ் துபே தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்த கான்பூர் போலீஸார் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 மாநில போலீஸார் இணைந்து துபேவை தேடி வந்த நிலையில், உஜ்ஜைனி கோவிலில் விகாஸ் துபேவை சுற்றி வளைத்து போலீஸ் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பிறகு அவர் உ.பி. கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இன்று துபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில்தான், அவரின் நெருங்கிய கூட்டாளியான அமன் துபே உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை