இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு

பிரசிலியா: பிரேசிலில் இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடிய 11 வயது மகனை தாய் கழுத்தை நெரித்துக் கொன்றார். 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்கப்பட்டது.

தாயும் கைது செய்யப்பட்டார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி (33), ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 11 வயதுடைய ரஃபேல், செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடிக் கொண்டிருப்பதில் ஆர்வமுடையவர்.

இரவு நேரத்தில் நீண்ட நேரம் வரை செல்போனில் ‘கேம்’ விளையாடி வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், மகன் ரஃபேலிடம் தாய் டகோகென்ஸ்கி, ‘செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட வேண்டாம்’ என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

ஆனால், ரஃபேல் விளையாடுவதை விடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த டகோகென்ஸ்கி, மகனை கழுத்தை ெநரித்துக் கொன்றுவிட்டார்.

இருந்தும் அவனது உடலை மறைப்பதற்காக, மகனின் சடலத்தை ஓர் அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்தார். பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டின் கேரேஜில் (வாகனங்கள் பழுதுபார்க்கும் இடம்) கொண்டு சென்று வைத்துவிட்டு வந்துவிட்டார்.

கிட்டதிட்ட 10 நாட்களுக்கு மேலான நிலையில் மோசமான அழுகிய துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினருக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி ஒருவாரமாக விசாரணை நடத்தினர்.

நீண்ட விசாரணைக்கு பிறகு கொலையானது சிறுவன் ரஃபேல் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிறுவனின் தாய் டகோகென்ஸ்கியிடம் விசாரணை நடத்தினர்.அவர் முன்னுக்குபின் முரணாக பதில் சொன்ன நிலையில், ஒருகட்டத்தில் மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரேசில் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரஃபேல் தனது தாயிடம் அதிக பாசம் கொண்டிருந்தார். தனது தாய்க்கு அனுப்பிய மெசேஜில், தன்னையும் தனது சகோதரரையும் கவனித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தாயின் அன்பு குறித்து புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார். விசாரணையின் ஆரம்பத்தில் தனது நடத்தை குறித்து மகன் வாக்குவாதம் செய்ததால், அவன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறி டாகோகென்ஸ்கி தெரிவித்தார்.போலீசாரின் விசாரணையை திசை திருப்ப முயன்றார். ஆனால் வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில், ஸ்னிஃபர் நாய்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது.

செல்போனில் மகன் தொடர்ந்து ‘கேம்’ விளையாடியதால், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றதாக டகோகென்ஸ்கி ஒப்புக்கொண்டார்’ என்றனர்.

.

மூலக்கதை