நாட்டின் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் 50% செலவை அரசே ஏற்கும் :பிரிட்டன் அரசு அதிரடி

தினகரன்  தினகரன்
நாட்டின் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் 50% செலவை அரசே ஏற்கும் :பிரிட்டன் அரசு அதிரடி

லண்டன் : நாடு முழுவதும் உள்ள எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் மொத்த விலையில் 50% அரசே ஏற்கும் என்று பிரிட்டன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு தளர்த்தி இருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் வருமானம் குறைந்துவிட்டதால் பிரிட்டன் மக்களின் செலவிடும் திறன் குறைந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கையாக வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பிரிட்டன் ஹோட்டல்களில் உணவு உண்ணும் மக்களின் கட்டணத்தின் 50%-ஐ பிரிட்டன் அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக்கூறுகையில், \' ஆகஸ்ட் மாதம் முழுவதும் உள்ள உணவகங்களில் சாப்பிடும் பிரிட்டன் குடிமக்களுக்கு விலையில் தள்ளுபடி வழங்கப்படும். திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரை உணவு விலையில் அதிகபட்சம் 50%தள்ளுபடி வழங்கப்படும். அதாவது குழந்தைகள் உள்ளிட்ட ஒவ்வொரு தனி நபருக்கும் தலா 10 பவுண்ட் அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும்,\'என்றார். மேலும் பொது மக்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகையை அடுத்த 5 நாட்களில் குறிப்பிட்ட உணவகத்தின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் பணியாற்றும் 18 லட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.  

மூலக்கதை