குல்புஷன் ஜாதவ் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என பாக்.தெரிவிப்பது பொய்யானது என இந்தியா குற்றச்சாட்டு!!!

தினகரன்  தினகரன்
குல்புஷன் ஜாதவ் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என பாக்.தெரிவிப்பது பொய்யானது என இந்தியா குற்றச்சாட்டு!!!

டெல்லி: பாகிஸ்தானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்புஷன் ஜாதவ் தமது வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது உண்மைக்கு மாறான தகவல் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ் ஈரானில் வியாபார வேலைக்காக சென்றிருந்தபோது, உளவு பார்ப்பதாக கருதி பாகிஸ்தான் இராணுவ படையினரால் கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர், 2017ம் ஆண்டு குல்புஷன் ஜாதவ் மீது விசாரணை மேற்கொண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்து நாட்டில் ஹக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு 8ம் தேதி இந்தியா வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது இந்திய தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை பாகிஸ்தான் விதித்திருப்பது கடந்த 1977ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் நடந்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும், ஈரானுக்கு வியாபாரம் சம்பந்தமாக ஜாதவ் சென்றிருந்தார் என்றும், அவரை பாகிஸ்தான் உளவுப்பிரிவினர் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும் ஹரீஷ் வாதாடினார். இதனையடுத்து, குல்புஷன் ஜாதவ் இந்திய தூதரங்கத்தை அணுகவும், தண்டனையை மறு ஆய்வு செய்யவும் சர்வதேச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, மரணதண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய குல்புஷன் ஜாதவ் மறுத்து விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், குல்புஷன் ஜாதவின் உரிமைகளை பாகிஸ்தான் பறித்து வருவதாகவும், மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்திய அதிகாரிகள் குல்புஷன் ஜாதவை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை